உரிமையைக் கேட்கிறோம்; பிச்சையல்ல; மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
Anbil Mahesh Poyyamozhi: புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என மத்திய அமைச்சர் கூறியதற்கு அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது என மத்திய அமைச்சர் விமர்சித்தார். இதற்கு எதிர்வினையாக அன்பில் மகேஷ், உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது எனக் கூறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவே தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது எனவும் அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்
அவரது பேச்சுக்கு தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
"இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போனை விட ஸ்மார்டாக இருங்கள்! மாணவரின் கேள்விக்கு சத்குரு அளித்த பதில்!

