கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..! மாணவ அமைப்பு போராட்டத்தில் வன்முறை.. போலீசார் துப்பாக்கி சூட்டால் பதற்றம்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.அப்பள்ளியில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றை மூடி மறைத்ததாகவும் புகார்கள் கூறப்பட்டது.. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, மன அழுத்தத்தை ஆராய்ந்து, உரிய தீர்வுகான தமிழக அரசு தனிக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே நீதி கேட்டு மாணவி படித்த பள்ளிக்கு முன்பாக மாணவர் அமைப்பினர் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்க்குள் சிலர் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போலீஸ்கார்ர்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. போராட்டம் கையை மீறி வன்முறையை நோக்கி சென்றதால் போராட்டக்காரர்களை கலைக்கும் வகையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் காரணமாக போலீசார், மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் குழு மூலம் கூடிய கூட்டம்...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்