கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் குழு மூலம் கூடிய கூட்டம்...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பாக போராட்டத்திற்கு வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஒன்றினைந்து வன்முறையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஶ்ரீமதியின் உடலை பெறாமல் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் மாணவிக்கு நீதி வேண்டி பள்ளி வளாகம் முன் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
பள்ளி பேருந்துக்கு தீ வைப்பு
கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் இன்றும் அமைதியான முறையில் தான் போராட்டம் நடைபெறும் என காவல்துறையினர் நினைத்திருந்தனர். ஆனால் திடீரென போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை கோரி கடந்த 5 நாட்களாக சமூக வலை தளத்தில் செய்தி பரவிய நிலையில், ஒரு சிலர் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த குழுக்கள் மூலம் 500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு அணைவரும் பள்ளிக்கு முன்பாக கூடி மாணவி மரணத்திற்கு நீதி வேண்டி முழக்கமிட்டுள்ளனர். இதில் ஒரு சில மர்ம நபர்கள் பள்ளிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கிருந்து சிதறிவர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.அங்கிருந்த பேருந்துகளை உடைத்து தீவைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த டிராக்டர்களை கொண்டு பள்ளி பேருந்தில் மோதி பேருந்துகளை இழுந்து சென்றனர்.
உள்ளாடையில் ரத்தக்கறை.. மார்பு பகுதியில் காயங்கள்.. அதிர்ச்சி கிளப்பும் பிரேத பரிசோதனை அறிக்கை..
வாட்ஸ் அப் குழு உருவாக்கி கூடிய கூட்டம்
குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை போல பஸ்களை அடித்து நொறுக்கி 10க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீவைத்து எரித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிக்குள் சென்ற கும்பல் அங்கிருந்த ஆவணங்களை தூக்கி வீசியும் பள்ளி மேசைகளை திருடிக்கொண்டும் சென்றது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு உருவானது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்கள் சமூக வலை தளம் மூலம் ஒன்றாக திரண்டனர் என்றும் அளவுக்கு அதிகமானோர் திரண்டதாலும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லையென கூறியுள்ளனர். இதனையடுத்து தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் பாதுகாப்பிற்கு அதிரடிப்படையின் குவிக்கப்பட்டுள்ளனர்.அப்போது தென்னந்தோப்பு பகுதியில் மறைந்து இருந்த கலவரக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்