தனது சொந்த மாவட்டமான திருவாரூரை முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் காயவிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தனது பேச்சின்போது கடைசி வரை கருணாநிதி பெயரை குறிப்பிடவில்லை.
தவெக தலைவர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாகையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட விஜய், அதனை நிறைவேற்றிக் கொடுக்காத திமுக அரசை கண்டித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் திருவாரூர் சென்றார். நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
திருவாரூரை காய விட்ட முதல்வர் ஸ்டாலின்
இதன் பிறகு திருவாரூர் தெற்கு ரத வீதியில் தவெக தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது அவர், ''திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோயிலும், ஆழித்தேரும் தான் உடனே நினைவுக்கு வரும். பல ஆண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தார் ஒருவர். ஆனால் அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை ஓட வைக்க விடாமல் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். திருவாரூர் தங்கள் சொந்த மாவட்டம் என அவர்கள் மார்தட்டி சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் சொந்த மாவட்டத்தையே முதல்வர் ஸ்டாலின் கருவாடாக காய விட்டுள்ளார்.
நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் லஞ்சம்
திருவாரூர் மாவட்டத்தில் சரியான சாலை வசதிகள் இல்லை. நாகையை போன்று திருவாரூரும் குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல துறைகள் இல்லை. நெல் கொள்முதலுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குகிறார்கள். 40க்கு 40 என பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.
கருணாநிதி பெயரை சொல்லாத ஸ்டாலின்
இந்த மாவட்டத்துக்கு ஒரு மந்திரி (அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா) உள்ளார். அவர் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே சேவை செய்கிறார். அவரை நாம் மக்கள் சேவையாற்ற வேண்டும். உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என உங்கள் குடும்பதுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்'' என்றார். விஜய் தனது பேச்சின் போது முதல்வர் ஸ்டாலினின் அப்பா என்று பலமுறை குறிப்பிட்டார். மறைந்த கருணாநிதியின் பெயரை விஜய் கடைசி வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
