நாகையை தொடர்ந்து திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்கிறார்கள். விஜய்யை காண தவெக தொண்டர்கள் திரண்டதால் கருணாநிதி கோட்டையான திருவாரூர் திணறியது. 

தவெக தலைவர் விஜய் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாகையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட விஜய், மக்கள் நலப்பணிகளை செய்யாத திமுக அரசையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார். மேலும் சனிக்கிழமைகளில் தான் பிரசாரம் செய்வதற்கும் விளக்கம் அளித்திருந்தார்.

திருவாரூரில் விஜய் பிரசாரம்

நாகையில் பிரசாரத்தை முடித்த விஜய், திருவாரூரில் பிரசாரம் செய்ய புறப்பட்டார். திருவாரூர் தெற்கு ரத வீதியில் அவர் பிரசாரம் செய்கிறார். விஜய் செல்லும் வழி எங்கும் தவெக தொண்டர்கள் திரண்டு வந்ததால் நாகையில் இருந்து திருவாரூர் நகர எல்லை வரை வேகமாக வந்த அவரது வேன், பின்பு திரூவாரூர் நகருக்குள் மிக மெதுவாக சென்றது. திருவாரூர் செல்லும் வழியில் பல இடங்களில் திரண்டு நின்ற தவெக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவிப்பு

திருவாரூர் மாவட்ட எல்லைக்கு விஜய் வந்தபோது அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழிநெடுக விஜய்க்கு பலர் பாசத்துடன் பழங்களை கொண்டு வந்து கொடுத்தனர். பலர் தாங்கள் கொன்டு வந்த வேறு சில பழங்களையும் கொடுத்தனர். அவற்றை விஜய் அன்புடன் வாங்கிக் கொண்டார். தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் விஜய்யின் வாகனம் மிதந்து வந்தது.

தவெக தொண்டர்கள் மயக்கம்

விஜய்யுடன் கைகொடுக்க வேண்டும். விஜய்யுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பல தவெக தொண்டர்கள் அவரது வாகனத்தை ஆங்காங்கே சூழ்ந்து கொண்டனர். இதனால் திருவாரூர் மரக்கடை என்ற பகுதியில் இருந்து விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு வாகனம் வர சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலானது. அங்கு கட்டுக்கடங்காத கூட்டத்தால் தவெக தொண்டர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.