தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு இனி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத நிலையை உருவாக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர் பாதுகாப்பு படையை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தின் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நிகழ்த்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தவெக.வுக்கு பெரும் அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடைய கட்சியின் மீதான அவப்பெயரை மாற்றும் முயற்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்காக மூத்த நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் விஜய் முதல் கட்டமாக தொண்டர் பாதுகாப்பு படையை உருவாக்க முடிவு செய்துள்ளார். தொண்டர் பாதுகாப்பு படையானது கட்சி சார்பில் நடைபெறும் பெரிய கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, நிகழ்ச்சியின் போது தொண்டர்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொடுப்பது, தொண்டர்களை பாதுகாப்பாக வழிநடத்துவது உள்ளிட்டப் பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.
இதற்காக மாவட்டந்தோறும் ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கட்சி சார்பில் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தங்கள் பணியை மேற்கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கைது நடவடிக்கை காரணமாக தலைமறைவாக இருந்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளார். இதனால் கட்சி பணிகள் எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே உள்ளது. இதனால் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் முயற்சியிலும் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
