கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்ற தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள்.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு ஆளும் கட்சி தரப்பினர் தவெக.வையும், தவெக தரப்பினர் ஆளும் கட்சியையும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அசம்பாவிதம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் சென்ற நிலையில், அதிகாரிகள் விபத்து தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு தொடர்பான விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ.20 லட்சத்தினையும் இன்று பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர். இதனை கட்சியின் தலைவரும் சமூக வலைதளப் பதவில் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆறுதல் தெரிவித்து இழப்பீடுகள் வழங்கப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் முயற்சியையும் தவெக மேற்கொண்டுள்ளது. அதன்படி தவெக சார்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டாம் என விஜய் கேட்டுக் கொண்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
இதனை பின்பற்றும் விதமாக தவெக தொண்டர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகரும், ஆட்டோ ஓட்டுநருமான சிவசெல்வம் தனது ஆட்டோவின் பின் பகுதியில், “41 சொந்த, பந்தங்களை இழந்து வாடும் தளபதி விஜய் அவர்களின் கவலையிலும், துக்கத்திலும் பங்கு கெண்டு இந்த ஆண்டு தீபாவளி எனக்கு இல்லை” என்று போஸ்டர் ஒட்டி தனது ஆதரவையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
