கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது என வேதனை தெரிவித்தார்.

கோவையில் கல்லூரி மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கார் கண்ணாடியை உடைத்து மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த ஆண் நண்பரை அடித்து தாக்கி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை

அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் அருகே நடந்த சம்பவம் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைஅர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொடூரர்களை சுட்டுப் பிடித்த காவல்துறை

கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரிக்கை வலுத்த நிலையில், மாணவியை சீரழித்த 3 கயவர்களை காவல்துறையினர் நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை கூடாது

இந்த நிலையில், எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில அளித்த அவர், ''எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அதுவும் நமது கொங்கு மண்ணில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கித் தருவதும் காவல்துறையின் பொறுப்பு.

காவல்துறை மீது நம்பிக்கை

காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன். அந்த சகோதரிக்கும், அவருடைய பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது தான். சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.