வட இந்தியாவில் வ.உ.சி.யின் பெயர்களை ஏன் வைக்கவில்லை? என திருச்சி சிவா கேள்வி எழுப்பிய நிலையில், வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? என வ.உ.சி பேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது பேசிய பிரதமர் மோடி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து பெருமையுடன் பேசினார். இந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, ''தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் சாலை உள்ளது. காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் காந்தி பெயரில் மருத்துவமனை வைத்துள்ளோம். நேருவின் மனைவி கமலா நேரு பெயரை பூங்காவுக்கு வைக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் வ.உ.சி பெயரில் சாலை உள்ளதா?
ஆனால், வட இந்தியாவில் வ.உ.சி பெயரில் சாலை உள்ளதா? பாரதியார் பெயரில் ஏதும் தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதா? வீரபாண்டிய கட்டபொம்மன் நாட்டுக்காக போராடியது யாருக்காவது தெரியுமா? தமிழக சுதந்திர போரட்ட வீரர்களை புறக்கணித்தது ஏன்?'' என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், திருச்சி சிவாவுக்கு பதிலடி கொடுத்த வ.உ.சி பேத்தி மரகதம் மீனாட்சிராஜா, வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முரசொலி மாறனுக்கு ஏன் சிலை?
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், ''திருச்சி சிவா வ.உ.சி பெயர் வட இந்தியாவில் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டுள்ளார். பாவம் ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருக்கிறார். எத்தனை பல்கலைக்கழகத்துக்கு வ.உ.சி பெயர் வைத்திருக்கிறார். எத்தனை நூலகத்துக்கு வ.உ.சி பெயர் வைத்திருக்கிறார். இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்தபோது வ.உ.சிக்கா சிலை வைத்தார்கள். முரசொலி மாறனுக்கு சிலை வைத்தார்கள். முரசொலி மாறன் தியாகம் செய்து சிறைக்கு சென்று சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா?
காந்திஜிக்கு ஜால்ரா தட்டவில்லை
வ.உ.சி பெயர் வட இந்தியாவில் இல்லாததற்கு காரணம் அவர் தென்னிந்தியர் என்பதால் அல்ல. அவர் காந்திஜிக்கு ஜால்ரா தட்டவில்லை என்பது தான். வட இந்தியாவில் எத்தனை பேர் சுதந்திரத்துக்காக போராடினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? விபின் சக்ரபாலத்துக்கு வட இந்திய தெருக்களில் பெயர் இருக்கிறதா? இல்லை தென்னிந்திய தெருக்களில் பெயர் இருக்கிறதா? தமிழ்நாட்டில் யாருக்காவது அவரை தெரியுமா? இன்னும் அரவிந்தர், சித்தரஞ்சன்தாஸ் இன்னும் ஏராளமான பேர் வட இந்தியாவிலும் சுதந்திரத்துக்காக போராடினார்கள். தென்னிந்தியாவிலும் சுதந்திரத்துக்காக போராடினார்கள்.
இந்தியா முழுவதும் எந்த புகழும் இல்லை
அவர்கள் பெயர் எல்லாம் ஏன் தெரியவில்லை? அது காந்தி, நேருவின் கூட்டு சதி. என்னமோ சுதந்திரம் இவர்கள் இருவரும் தான் வாங்கிக் கொடுத்தபோது போல எல்லா பக்கமும் இவர்களின் பெயர் இருக்கிறது. ஆகவே வ.உ.சி பெயர் வட இந்தியாவில் இல்லாததற்கு காரணம் அவர் காந்திஜிக்கு ஜால்ரா தட்டாதது தான். வட இந்தியாவில் உள்ள பல தலைவர்களுக்கும் இந்தியா முழுவதும் எந்த புகழும் இல்லை. இதுமட்டுமின்றி இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக வ.உ.சி.க்கு எவ்வளவோ செய்திருக்கலாம்.
திமுக ஒன்றும் செய்யவில்லை
வ.உ.சி எழுதிய மெய்யறத்தை (வ.உ.சி எழுதிய மெய்யறம் என்ற நூல்) பாடமாக வைக்கும்படி நான் 10 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு வருகிறேன். அது ஒரே வரி ஆத்திசூடி போன்றது தான். அதை இவர்கள் ஏறெடுத்து பார்த்தார்களா? வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற பெயரை வ.உ.சி என்று சுறுக்குவதில் தான் இவர்கள் கவனம் இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு புகழாரம்
மோடி அவர்கள் எவ்வளவு அழகாக வந்தே மாதரம் குறித்து பேசியபோது வ.உ.சி கப்பலோட்டியது குறித்து வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று பெருமையாக குறிப்பிட்டு பேசுகிறார். இதை விட நமக்கு என்ன பெருமை என்ன வேண்டும்? காங்கிரசும், திமுகவும் வ.உ.சி மற்றும் மற்ற தலைவர்களை முடக்குவதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்கள். இப்போது வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


