'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைய இப்பாடல் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாவதற்கு 'வந்தே மாதரம்' நம்மை ஊக்குவிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சுதந்திரத் தாய்க்கான பாடல்

“வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமைக்குரியது, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வந்தே மாதரம் விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் ஏதுமில்லை. வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தினால் தான் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல, சுதந்திரத் தாய்க்கான பாடல். அது அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை" என்று பிரதமர் குறிப்பிட்டார்,

மேலும், “பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்கும் வகையில், ஆங்கிலேயர்கள் 'பிரிட்டன் மகாராணி வாழ்க' என்று பாட வைக்க விரும்பியபோது, 1875-ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி 'வந்தே மாதரம்' பாடலை நமக்குக் கொடுத்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாவதற்கு, வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றின் கறுப்பு அத்தியாயம்.” எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Scroll to load tweet…

வ.உ.சி. முதல் பாரதியார் வரை

பிரதமரின் உரையில் வந்தே மாதரத்தின் மகத்தான சக்திக்குத் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்கள் அளித்த பங்களிப்பு பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றன.

"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் சுதேசி கப்பலின் மீது 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்தது, அந்த முழக்கம் கப்பல் போக்குவரத்தில் கூட தேசிய உணர்வை விதைத்ததைக் குறிக்கிறது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வந்தே மாதரம் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்ததோடு மட்டுமல்லாமல், 'தாயின் மணிக்கொடி பாரீர்' என்று தொடங்கும் தனது பாடலில் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தையைப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இந்தப் பாடல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பரவுவதற்கு அவர் உதவினார்" என பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

"இந்த விவாதத்தின் மூலம், எதிர்காலத் தலைமுறையினர் வந்தே மாதரம் குறித்து அறிந்துகொள்ள முடியும். எதிர்பாராத விதமாக, வந்தே மாதரத்தின் 100-வது ஆண்டில் நாம் அவசரகால நிலையை (Emergency) சந்தித்தோம்" என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.