பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இதற்கு ஸ்டாலின் ரெடியாக இருக்கும்படி குஜராத்தில் அமித்ஷா சபதம் எடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் அகமதாபாத்தில் 1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உட்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்பு இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்
இது தொடர்பாக பேசிய அமித்ஷா, ''பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அடுத்து தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் இதற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் சக்தியுடன் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும்'' என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சாதனை
தொடந்து பேசிய அமித்ஷா, ''பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றவும், ஒவ்வொரு துறையிலும் நாட்டின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து பாஜகவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று சாதனை படைத்தார்.
காங்கிரசை மக்கள் ஏற்கவில்லை
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலை தொடர்ந்து குறை கூறி வருகிறார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் நிராகரித்து வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.


