அமித்ஷா, மோடி, நயினார் நாகேந்திரன் என அனைவரும் ஒன்றுகூடி வந்தாலும் காவி நுழைய முடியாது என பாடகரும், சமூக செயற்பாட்டாளருமான கோவன் பாடலாக பாடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் ஹாட் ஸ்பாட்டாக திருப்பரங்குன்றம் மாறி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் தூண் அருகிலேயே தர்கா அமைந்திருப்பதால் அங்கு தீபம் ஏற்றும் பட்சத்தில் அது இரு மதங்களுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி அதனை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. மேலும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் கலை இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளரும், பாடகருமான கோவன் திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாடிய பாடல் தற்போது வைரலாகி வருகிறது. திமுக சார்பில் மதுரை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தனது குழுவினருடன் கலந்து கொண்ட கோவன், “மதுரை மண்ணில் சங்கி கும்பல் அலறுது, ஒற்றுமையை குலைக்க சங்கிகள் பின்னுகின்ற சதி வலைகள் பல அயோத்தி போல கலவரம் பண்ணி அமைதியில்லா பூமியாக்கப்போற மதுரைய...
ஆனால் மதுரை மாநகரம் மதநல்லிணக்கனத்தின் மடியில். அமித்ஷா, மோடி, நயினார் ஒன்று கூடி வந்தாலும் உன் காவி நுழைய முடியாது எங்க கருப்பசாமி மண்ணில்”. என்று அவர் பாடிய பாடல் வைரலாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்த கோவன் திமுக ஆட்சியில் பெரிய அளவில் எந்தவித போராட்டமும் மேற்கொள்ளாதது அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது கூட இவர் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
