திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாமதமாக வந்தார். அவரைப் பார்த்த நிர்வாகிகள் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட, திருச்சி சிவா மேடையிலேயே ஆவேசமடைந்தார்.
Karur DMK internal politics : தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக அரசு பதவியேற்று 4 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தங்களது ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கரூரில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தலைமயில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.
கரூர் பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா ஆவேசம்
அப்போது திமுக ஆட்சி கால திட்டங்களையும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி தொடர்பாகவும் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அறிஞர் அண்ணா பொறுமையின் சின்னம், அன்பின் அடையாளம், அண்ணா அறிவின் உச்சம் என பேசும்போது திடீரென பொதுக்கூட்டத்திற்கு வந்த செந்தில் பாலாஜியை பார்த்த கரூர் மாவட்ட நிர்வாகிகள் எழுந்து நின்றனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த திருச்சி சிவாவின் பேச்சு தடை பட்டது. இதனால் சற்று ஆவேசமடைந்த திருச்சி சிவா, மேடைக்கு கீழே இருந்தவர்கள் பார்த்து... யோவ் இங்க பாருங்க, அவர் பாட்டுக்கு வாராரு நீங்க ஏன் எழுந்திருக்கிறீங்கள். நான் அடி வயிற்றில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என தெரிவித்து முகத்தை ஆவேசமாக வைத்திருந்தார்.
செந்தில் பாலாஜியால் கடுப்பான திருச்சி சிவா
அப்போது மேடையேறிய செந்தில் பாலாஜி திருச்சி சிவாவிற்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் கூறுகையில், திருச்சியில் 3 அணிகளாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் மற்றும் திருச்சி சிவா என அணிகள் உள்ளது.
அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி அன்பில் மகேஷ் மூலமாக திமுகவில் இணைந்தார். எனவே அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி நெருக்கமாக உள்ளனர். இந்த நிலையில் தான் நிகழ்ச்சிக்கு காலதாமதமாக வந்த செந்தில் பாலாஜி மீது மேடையிலேயே திருச்சி சிவா கடுப்பானதாக கூறப்படுகிறது.
