- Home
- Tamil Nadu News
- சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்.. வீட்டு அடுப்பு எரிவதிலும் சிக்கல்!
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்.. வீட்டு அடுப்பு எரிவதிலும் சிக்கல்!
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிலிண்டர்கள் தட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போரால் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கேஸ் சிலிண்டர்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வணிக சிலிண்டர் விலை திடீரென உயர்ந்தது மட்டுமல்லாமல், அதன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் நாளை முதல் (மார்ச் 10) ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள
தாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் சங்கத்தின் இணைச் செயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ''இது எங்கள் முடிவு அல்ல, அரசு எங்கள் மீது திணிக்கும் அழுத்தம். முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் கொடுத்திருந்தால், இந்த நிலையைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும்
நாங்கள் கடையடைப்புக்கு முடிவு செய்யவில்லை. எங்களுக்கு சிலிண்டர் சப்ளை ஆகவில்லை. நாளை மதியம் வரை மட்டுமே எங்களிடம் சிலிண்டர் இருப்பு உள்ளது. அதற்குள் அரசு விநியோகம் செய்யவில்லை என்றால், அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும். "15 நாட்களுக்கு முன்பே ஒரு அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். திடீரென விநியோகத்தை நிறுத்தினால், நாங்கள் மூடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.
அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்
"மத்திய அரசு 70 நாட்களுக்கு கேஸ் இருப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் இன்று முதல் திடீரென கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்களை நம்பி பலர் உள்ளனர். நாங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைச் செய்துள்ளோம்" என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு
கர்நாடகாவை போல் தமிழகத்திலும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் 2 நாள் தான் வணிக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளது. ஆகவே மத்திய அரசு இது தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
போதிய சிலிண்டர்கள் சப்ளை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் இயங்குவதில் பெரும் பாதிப்பு ஏற்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு
வணிக சிலிண்டர்களை போன்று வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் ஒரு முறை சிலிண்டர் புக் செய்தால் 21 நாட்களுக்கு பிறகே மறுபடி புக் செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

