மத்திய அரசு பணியாளர்களின் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலைத் தேர்வு சென்னையில் இன்று 68 மையங்களில் நடைபெற்று வருகிறது.
முதல் நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வை மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்துகிறது. இதில், முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வானது, காலை 9.30 முதல் 11.30 வரையும் மற்றும் பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறுகிறது. சென்னை- 25 ஆயிரம் பேரும், புதுச்சேரி- 3,115 , கோவை- 9,445, மதுரை- 8,420 பேரும் எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அசு நடத்தும் தேர்வு என்பதால் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் தேர்வர்கள் தங்களுக்கான கிருமி நாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும்வகையில் கண்காணிப்புப் பணிக்கு வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் நிலையில் உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்களும், தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், அறை கண்காணிப்பாளர்களும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறையினரால், தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் கைப்பேசி ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு போதுமான சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சென்னை மலர்க் கண்காட்சி.. வெறும் 2 நாட்களில் ரூ.8.35 லட்சம் கட்டணம் வசூல்.. இன்றுடன் நிறைவு..
