தொழில்நுட்பத்துறையில் இது இந்தியாவின் தலைமுறை - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!
தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113 வது ஆண்டு கூட்டத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தொழில்நுட்ப உற்பத்தி துறையில் சிறந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் 85 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தினர். ஆனால், இன்று 99.7 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “2014 ஆம் ஆண்டில் மின்னனு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் தான் நாடு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.” என தகவல் தெரிவித்தார்.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை ஆண்டுக் கூட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புரை!
“பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 9 ஆண்டில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் மிகவும் ஆச்சரியமான காலக்கட்டத்தில் உள்ளோம்” எனவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், “அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தொழில்நுட்பத்துறையில் தலைமையாக இருக்கும் இது இந்தியாவின் தலைமுறை என சொல்லும் நிலை உருவாகும்” என பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.