முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை: ரவிக்குமார் எம்.பி.,!

முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்

Union Government has no intention to increase senior citizens pension says ravikumar mp

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு (என்ஏபி) 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாதத்திற்கு ரூ.200 மட்டுமே எனத் தேக்கமடைந்துள்ளது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதற்கான காரணங்கள் எவை? முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக,  இல்லையெனில் அதற்கான காரணங்களைக் கூறுக; முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் 2011 முதல் 2021 வரை முதியோர் ஓய்வூதியத்திற்காக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகை, ஆண்டு மற்றும் மாநில வாரியாக எவ்வளவு?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

அதற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் கூறியிருப்பதாவது: “தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் ரூ.200/- வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள  பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500/- ஆக வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. எவ்வாறாயினும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், SAP இன் கீழ் மத்திய உதவிக்கு மேலே கூட்டி வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. தற்போது, ​​இந்த தொகைகள் முதியோர் ஓய்வூதியத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதம் ரூ.50 முதல் ரூ. 3000 ரூபாய் வரை மாநில அரசுகளால் உயர்த்தி வழங்கப்படுகின்றன. 

2002-03 முதல் 2013-14 வரை, மாநிலத் திட்டமாக தேசிய சமூக உதவித் திட்டம் ( NSAP) செயல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் மற்றும் அன்னபூர்ணா ஆகிய அனைத்து துணைத் திட்டங்களுக்கும் ஒரே ஒதுக்கீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் மத்திய உதவித் தொகையாக (ACA)  வழங்கப்பட்டது; இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் - இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2014-15 முதல், இத்திட்டம் 'மத்திய நிதியுதவித் திட்டமாக' செயல்படுத்தப்படுகிறது. 

2011-2014 ஆம் ஆண்டில் தேசிய சமூக உதவித் திட்டங்களின் ( NSAP)  கீழ் (முதியோர் ஓய்வூதியத் திட்டம் உட்பட) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வெளியிடப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் 2015 முதல் 2021 வரை  SAP இன் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட நிதியின் விவரம் பின்னிணைப்பு -1 இல் தரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை எவ்வளவு?

2011-2021 ஆண்டுகளில் மாநில/ யூனியன் பிரதேச வாரியாக NSAP இன் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின்  எண்ணிக்கை பின்னிணைப்பு-Il இல் கொடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறுகையில், “ஒன்றிய அரசு அளித்துள்ள இணைப்பில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் 2011-12 இல் 12 லட்சத்து 4 ஆயிரமாக இருந்த முதியோர் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 12 லட்சத்து 39 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது. அவர்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்த ஓய்வூதியத் தொகைக்கான நிதி 2021-22 இல் ரூ.589.85 கோடி. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.201.26 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டதால் எஞ்சிய தொகை 2021 இல் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. மற்ற ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட நிதியைப் பார்த்தால் 2016-17 முதல் 3 ஆண்டுகள்  ஆண்டொன்றுக்கு ரூ.360.15  கோடி விடுவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதன் பின்னர் 2019-20 இல் ரூ.250 கோடியும் 2020-21 இல் 201.26 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை. ஒன்றிய பாஜக அரசு உயர்த்தாவிட்டாலும் இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.” என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios