இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

Ministry of Women and Child Development provided data of missing children in india for last five years

மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. குஜராத், டெல்லி, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ள தரவுகளின்படி, ஜனவரி 1, 2018 முதல் ஜூன் 30, 2023 வரை சுமார் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன குழந்தைகளில் 62,237 சிறுவர்கள், 2,12,825 பேர் சிறுமிகள். காணமால போன குழந்தைகளில் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காணாமல் போன பட்டியலில் மத்தியப்ப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 61,102 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில், 49,024 பேர் சிறுமிகள். அதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 49,129 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர், அதில் 41,808 பேர் சிறுமிகள்.

அடுத்தடுத்து நெருக்கடி: கண் கலங்கிய பைஜூஸ் நிறுவனர் - எழுச்சியும், வீழ்ச்சியும்!

கர்நாடகாவில் 18,893 சிறுமிகள் உட்பட 27,528 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 20,081 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில், 16,432 பேர் பெண் குழந்தைகள். தலைநகர் டெல்லியில் 15,365 சிறுமிகள் உள்பட மொத்தம் 22,964 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில் 17,149 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில், 14,840 பேர் சிறுமிகள்.

மக்களவையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில், 2,40,502 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட குழந்தைகளில் 1,73,786 பேர் சிறுமிகள், 66,638 பேர் சிறுவர்கள். லட்சத்தீவு மற்றும் மிசோரத்தில் குழந்தைகள் காணாமல் போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தலா ஒரு வழக்கு மட்டுமே இதுதொடர்பாக பதிவாகியுள்ளது.

நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை eன தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சாந்தா சின்ஹா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசாங்கம் ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. ஆனால் சிறுமிகளைப் பாதுகாப்பதில் போதுமான கவனம் இல்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இது பெரிய எண்ணிக்கை. இந்த விவகாரம் பெரிதாக பேசப்படவில்லை. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்க உதவும் TrackChild Portal-யை அரசு உருவாக்கியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios