அடுத்தடுத்து நெருக்கடி: கண் கலங்கிய பைஜூஸ் நிறுவனர் - எழுச்சியும், வீழ்ச்சியும்!
பைஜூஸ் நிறுவனம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் கண்கலங்கியுள்ளார்
அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக, இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் பெங்களூரு நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்திய அதிகாரிகள் லேப்டாப் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். அதுதவிர, முதலீட்டாளர்களுடனான பிரச்சினை, வேலை கலாசாரம் உள்ளிட்ட சர்ச்சைகளிலும் பைஜூஸ் நிறுவனம் சிக்கி வருகிறது. இது போன்று அடுத்தடுத்து பைஜூஸ் நிறுவனம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதை நினைத்து, அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் கண்கலங்கியுள்ளார்.
மத்திய கிழக்கு முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் டாலர்கள் நிதி திரட்ட திட்டமிடப்பட்ட நிலையில், துபாயில் நடைபெற்ற அதுதொடர்பான கூட்டம் ஒன்றில், தனது நிறுவனத்தை நினைத்து கண் கலங்கிய அவர், அதற்கு ஆதவரான சில கருத்துக்களையும் முன்வைத்ததாக அக்கூட்டத்தில் கலனது கொண்ட சிலர் தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பைஜூஸ் நிறுவனம் தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள், அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்ததாக குற்றம் சாட்டி வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
பைஜூஸ் மீதான குற்றச்சாட்டுகள்
பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் என்வி, பைஜூஸ் நிறுவனத்தின் அறிக்கை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவைகள் இதுபோன்ற ஒரு நிறுவனத்திற்கு போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தங்கள்து வழக்கமாக ஆலோசனையையும் பைஜூஸ் புறக்கணித்ததாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
“எங்கள் இயக்குனரின் தொடர் முயற்சிகள் இருந்தபோதும், செயல்பாடு, சட்ட மற்றும் பெருநிறுவன ஆளுகை விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பைஜூஸ் நிறுவனம் தவறாமல் புறக்கணித்தது.” என ப்ரோசஸ் என்வி தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீட்டை இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக ப்ரோசஸ் என்வி குறைத்துள்ளது.
பைஜூஸ் ரவீந்திரன், டியூஷன் ஆசிரியராக இருந்து 22 பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். Sequoia Capital, Blackstone Inc., மற்றும் Mark Zuckerberg இன் அறக்கட்டளை உட்பட உலகளாவிய முதலீட்டாளர்களை பைஜூஸ் நிறுவனம் கவர்ந்தது. கொரோனாவின் சந்தையின் பெரும்பகுதியை பைஜூஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருந்தது.
ஆனால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, பைஜூஸின் நிதிநிலை குறித்த கவலைகள் நிறுவனத்தின் நற்பெயரைக் குறைத்தது. நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியை பணியமர்த்துவதை ரவீந்திரன் ஏன் தாமதப்படுத்தினார் எனவும், உலகம் முழுவதும் உள்ள 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவ்வளவு வேகமாக அவர் வாங்கியது ஏன் எனவும் முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருப்பம் தருமா திருச்சி? திமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை துவக்கும் ஸ்டாலின்!
பைஜூஸில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேறியுள்ளனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாரிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மற்றும் பல கற்பித்தல் மையங்கள் கிட்டத்தட்ட காலியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரவீந்திரன் வெளிப்படையாக எதையும் தெரிவிக்காதவர். மிக விரைவாக வளர்ந்த ஒரு அனுபவமற்ற நிறுவனரின் உற்சாகம் அவரது தவறான செயல்களுக்குக் காரணம். நிதி தொடர்பான தகவல்களை மறைத்து, கணக்குகளை கடுமையாக தணிக்கை செய்ய தவறியதன் மூலம் அவர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பைஜூஸ் நிறுவனத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்
கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ரவீந்திரன், உள்ளூர் பள்ளியில் படித்தார். அந்த பள்ளியில் அவரது தந்தை இயற்பியல் ஆசிரியர், அவரது தாயார் கணித ஆசிரியர். பள்ளிப் படிப்பை முடித்ததும் ரவீந்திரன் பொறியியல் படித்தார்.
இதையடுத்து, ரவீந்திரன் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் சேர்க்கை இருமடங்கானது. இதனால், பெரிய விளையாட்டு அரங்கத்தில் அவர் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரிடம் பயின்றனர்.
நல்ல பயிற்றுனர்கள் பற்றாக்குறை மற்றும் பழமையான முறைகளில் கற்பிப்பது உள்ளிட்டவைகளுக்கு இடையே, ரவீந்திரனின் கற்பித்தல் முறைகள் இந்தியாவில் தனித்துவம் பெற்றன. ரவீந்திரன் தனது சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வைத்து கற்றுக் கொடுக்க வைத்தார். தொடர்ந்து 41 பயிற்சி மையங்களை அவர் திறந்தார். இதையடுத்து, பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை 2011ஆம் ஆண்டில் அவர் பதிவு செய்தார். திவ்யா கோகுல்நாத் என்ற முன்னாள் மாணவியுடன் இணைந்து அந்த நிறுவனத்தை அவர் தொடங்கினார். பின்நாட்களில் திவ்யாவை அவர் திருஅனம் செய்து கொண்டார்.
2015 ஆம் ஆண்டில், ரவீந்திரன் தனது வணிகத்தை டிஜிட்டல் மயமாக்கினார், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாலும் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் கவனம் செலுத்தும் சுய-கற்றல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது நிறுவனம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. இதனால், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வரிசை கட்டி நின்றார்கள்.
ஆனால், 2022ஆம் ஆண்டில் பிரச்சினைகள் எழ ஆரம்பித்தன. ஊழியர்கள் சிலர் நிறுவனத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், பைஜூஸ் நிறுவனத்துக்கு சரிவை ஏற்படுத்தியது. அவர் பணத்தைப் பாதுகாப்பதற்கும், லாபத்தை ஈட்டுவதற்கும் பதிலாக முதலீடுகளை உயர்த்த முயன்றார்.
அதுதவிட, மார்ச் 2021 இல் முடிவடையும் நிதியாண்டிற்கான நிதிக் கணக்குகளையும் அவர் தாக்கல் செய்யாதது குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மீறல்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகமும், பைஜூஸ் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக அந்நிறுவனத்தில் சோதனையும் நடைபெற்றது.
நிதியாண்டு முடிவடைந்த பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு, பைஜூஸ் இறுதியாக தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டது. அதில், 45.7 பில்லியன் ரூபாய்கள் நஷ்டம் காட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13 மடங்கு அதிகமாகும்.