திருப்பம் தருமா திருச்சி? திமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை துவக்கும் ஸ்டாலின்!
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திருச்சியில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார்
திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்புமுனைதான் என்று அக்கட்சியினர் உச்சிமுகர்ந்து கொள்ளும் அளவுக்கும் திருச்சிக்கும், திமுகவுக்கும் இடையேயான நெருக்கம் அனைவரும் அறிந்ததே. தேர்தல் அரசியலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்ற முடிவை பேரறிஞர் அண்ணா 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில்தான் எடுத்தார். அதன்பிறகு, பல முக்கிய முடிவுகளை திருச்சி மாநாடுகளில் திமுக எடுத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, திருச்சி சிறுகனூரில் 'விடியலுக்கான முழக்கம்' என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை திமுக நடத்தியது. அந்த வகையில், எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் திருச்சியிலேயே திமுக தொடங்கவுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டமிட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் திமுக முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில், திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திருச்சியில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட நேரடி பணிகளை தொடங்கும் வகையில், திருச்சியில் டெல்டா மண்டலங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை திருச்சியில் நடந்த திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டார். அந்த மாநாட்டுக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கப்பட்டது. அவரும், மிகப்பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்... என்ன காரணம் தெரியுமா?
அதன்படி, திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தை முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான ஸ்டாலின் ஜூலை 26ஆம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். இதில், 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளன. இறுதியாக இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் திருச்சி சங்கமம் 2023 என்ற விவசாயிகள் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜூலை 27ஆம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். இந்த கண்காட்சியானது நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி செல்லவுள்ளார். திருச்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கும் அவர், நாளை காலை அங்கிருந்து தஞ்சாவூர் செல்லவுள்ளார். அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 14 திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். பிறகு, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி வந்து இரவு 9 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.