Asianet News TamilAsianet News Tamil

அடுத்த பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்: உதயநிதி சொன்ன தகவல்!

மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

Udhayanidhi stalin inspects jallikattu stadium in alanganallur smp
Author
First Published Sep 20, 2023, 8:29 PM IST

தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக் கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை ஆகியவையும் அமையவிருக்கிறது.

விவசாயிகளுக்கு மானிய விலையை ட்ரோன்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்டார். அத்துடன், அடுத்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்திடும்பொருட்டு பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடையை உடைத்த கழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் ரூ.44 கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு அரங்கத்துடன் கூடிய மைதானத்தை அமைத்து வருகிறது. 

 

 

தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று நேரில் ஆய்வு செய்தோம். முகப்பு வாயில், காளைகள் காத்திருப்பு கூடம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, ஓய்விடங்கள் என அனைத்து நவீன வசதிகளுடன்  அமையவுள்ள இம்மைதானத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. 

வருகிற தை மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்துகிற வகையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அதிகாரிகள் - அலுவலர்களை வலியுறுத்தினோம்.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios