- Home
- Politics
- கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
கொடநாடு வழக்கில் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய மேத்யூ சாமுவேலின் டிரைவர் ஷைஜு, அவரது நண்பரான தீபூ ஆகிய இருவரையும் விசாரித்தால் எஸ்டேட் மேலாளர் உட்பட முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்கள் பலரும் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கொடநாடு வழக்கில் பழிவாங்கும் நடவடிக்கை?
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கே.வி.சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர், 2019-ல் சாட்சியை மிரட்டிய தனி வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் ஆதாரமில்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டனர். ஆனால், முதன்மை கொலை, கொள்ளை வழக்கில் இவர்கள் இன்னும் விசாரணையில் உள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது. நவம்பர் 30,ம் தேதி முக்கிய ஆதாரங்களுக்காக இன்டர்போல், குஜராத்தின் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, கொலைக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு வந்த வெளிநாட்டு அழைப்புகள், செல்போன் தகவல்களை ஆராய்கின்றனர். இந்த வழக்கு ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முன்னதாக 2025, மார்ச் மாதம் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் உட்பட பலர் விசாரிக்கப்பட்டனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய சாட்சியை மிரட்டியதாகக் கைதத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த சயான், வாளையார் மனோஜ் இருவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்து இருப்பது அன்றைய அதிமுக அரசு, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கைக் கையாண்டிருப்பது தெரிகிறது'’ என்று எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சயான், வாளையார் மனோஜ் விடுவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில், 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளைக் கடந்துள்ள போதும் வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை, கொள்ளைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.
நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவேன்' என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளும் விரைவில் முடியப்போகிறது. இன்னும் இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் சாட்சிகளை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்துவந்த சயான், வாளையார் மனோஜ் இருவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது, இந்த வழக்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவசர அவசரமாகப் பொய் வழக்கு
இதுகுறித்து சயான், வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் முனிரத்தினம் கூறுகையில், "கொடநாடு வழக்கில் கோளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சயான், வாளையார் மனோஜ் இருவரும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பாக பேட்டி கொடுத்தனர். இதனால் பதறிப்போய், சயான், வளையார் மனோஜ் ஆகியோர் வாய் திறக்காமல் இருக்க, உடனே அவர்களின் ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாகப் பொய் வழக்கு ஒன்றை அப்போதைய காவல்துறை பதிவு செய்தது.
வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த சாந்தாவை செல்போனில் அழைத்து 'எங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது' என அவர்கள் இருவரும் மிரட்டியதாக 2020-ம் ஆண்டு சாந்தா மூலம் புகாரைப் பெற்று வழக்கு தொடுத்தார்கள். இதன் மூலம், இருவரையும் கோவை சிறையில் அடைத்தனர். சயான், வாளையார் மனோஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், காவலதுறையால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆகையால், அது அப்போது இருந்த அதிமுக அரசின் மோசடி வலை குறித்து நீதிமன்றத்தில் தெளிவான வாதத்தை முன்வைத்தோம்.
இரு தரப்பையும் விசாரித்த நீதிமன்றம், இருவரையும் விடுவிப்பதாகத் தற்போது உத்தரவிட்டு இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கிளை வழக்குகளில் ஒன்றான இதில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசும், அதிமுக அரசின் கையில் இருந்த காவல்துறையும் எப்படி மோசமாகச் செயல்பட்டு இருக்கின்றன என்பதற்கு இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் இருவரும் விடுவிக்கப்பட்டு இருப்பதே சாட்சி’’ என்றார்.
முந்தைய அதிமுக- இன்றைய திமுக அரசுகள் மீது அதிருப்தி
இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்துவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன் கூறுகையில், 'இது ஒன்றும் சாதாரண இடத்தில் நடந்த ஒரு கொலை, கொள்ளைச் சம்பவம் கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த சம்பவம். அவரின் இறப்புக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவத்தில், அதிமுகவைச் சேர்த்த முக்கியப் புள்ளிகள்தான் முதன்மை மூளையாகச் செயல்பட்டு இருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.
தமிழக தேர்தல் களத்தில், அதிமுகவுக்கு எதிரான அங்குசமாக இருந்தது இந்த வழக்கு. கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சரான அதிமுக முக்கிய புள்ளியின் சகோதரர் ஒருவருக்கும் இதில் பங்கிருக்கிறது. இதில் தெளிவான விசாரணை நடத்தினால் மேலும் பலர் சிக்குவார்கள்.
ஆனால், இந்த வழக்கை விரைவாக நடத்துவதில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏனோ கவனம் செலுத்தவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் சூளுரைத்த ஸ்டாலின் இந்த வழக்கில் அமைதியாகி விட்டார். இந்த வழக்கு விசாரணையை நம்பியிருந்த ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் முந்தைய அதிமுக ஆட்சியை மட்டுமின்றி, தற்போதைய திமுக அரசு மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள்’’ எனக் கூறினார்.
திமுக ஆட்சியிலும் முட்டுக்கட்டை ஏன்..?
கொடநாடு விசாரணை தாமதமாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் கூறுகையில் "கொடநாடு கொலை வழக்கின் விசாரணை முழுமையாக நடந்து முடிந்து இருக்கிறது. சம்பவம் நடந்த அந்த நாளுக்கு முன்பும், பின்பும் சந்தேகப்படும்படியான 60 டவர்கள் உட்பட்ட செல்போன் பேச்சுகளின் ரெக்கார்டுகளை ஆய்வு செய்வதற்காக, குஜராத்துக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் ரிசல்ட் வரவேண்டி உள்ளது. அதேபோல, கொலைக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு வந்த வெளிநாட்டு அழைப்புகள், செல்போன் தகவல்களைப் பெற இன்டர்போலின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே வேறு எந்தத் தாமதமும் இதில் இல்லை" என்றார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழக்கில் முன்னால் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக, டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய மேத்யூ சாமுவேலின் டிரைவர் ஷைஜு, அவரது நண்பரான தீபூ ஆகிய இருவரையும் விசாரித்தால் கொடநாடு எஸ்டேட் மேலாளர் உட்பட முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்கள் பலரும் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தில் திடீர் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள். இவர்களது திடீர் கோடீஸ்வரர் பின்னணி குறித்து விசாரித்தாலே போதும். ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்தவிடாமல் திமுக ஆட்சியிலும் ஏன் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள்? என்பது விடை தெரியாத மர்மமாக உள்ளது’’ என்கிறார்.
