சிவனும், முருகனும் இந்து கடவுளா? இது தொடர்பாக என்னோடு தர்க்கம் செய்ய யாராவது தயாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சினையாக்க முயற்சி செய்கின்றனர். இத்தனை வருடங்களாக இல்லாத பிரச்சினையை தற்போது கையில் எடுத்திருப்பது ஏன்? திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜகவும், திமுக அரசும் தான் காரணம்.
தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஆட்சி செயல்படுத்திய நல்ல திட்டங்களை கூற முடியுமா? தேர்தல் வரும் நேரத்தில் தான் கட்சிகளுக்கு மக்கள் மீது பாசம் உருவாகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
சிவன், முருகன், மாயவன் ஆகியோர் இந்து கடவுளா? இது தொடர்பாக யாராவது என்னுடன் தர்க்கம் செய்ய முடியுமா? தேர்தல் நேரத்தில் திடீர் பாசம் காட்டுகிறார்கள். மதம் மனிதனுக்கானதா அல்லது மனிதனுக்காக மதமா? மதத்தை போற்றுகிறீர்கள் ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் வாழும் நாடாக மாற்றுகிறீர்கள்.
ஆனால் நாங்கள் இதனை மனிதன் வாழும் நாடாக உருவாக்க நினைக்கின்றோம். திமுக அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராட்டம் நடைபெறுகிறது. வாக்குக்காக காசு கொடுக்காமல் போட்டியிடும் துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


