விவசாயிகளுக்கு மானிய விலையை ட்ரோன்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ட்ரோன் கருவிகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

TN Govt to give Subsidy for Drones to farmers smp

விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில் நடப்பாண்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு, தற்பொழுது இரண்டாம் கட்டத்திற்காக 70 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி, நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ட்ரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2023-24-ஆம் நிதி ஆண்டில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், ட்ரோன்கள் வாங்க விரும்பும் சிறு, குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாய் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.  மேலும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மூலம் மானியத்தில் அமைக்கப்படும் வட்டார மற்றும் கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களில் தேவைப்படுகின்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் சேர்த்து ட்ரோன் கருவிகளையும் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே அரசின் மானியத்தில் கிராமப்புற இளைஞர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளால் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர வாடகை மையங்களில் கூடுதலாக ட்ரோன் வாங்க 40 சதவீதம் அல்லது நான்கு இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

ட்ரோன்களைக் கொண்டு வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர வாடகை மையங்கள்/உயர் தொழில்நுட்ப வாடகை மையங்களில் ட்ரோன்களை வாங்கிட விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ஐந்து இலட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு!

ட்ரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை  இயக்குவதற்கான பயிற்சியினைப் பெற்று அதற்கான உரிமத்தினையும் பெற்று ட்ரோனை இயக்கலாம் அல்லது ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம்.  ட்ரோனை வாங்க வங்கிக் கடன் பெறும்  விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து மூன்று சதவிகித வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இரண்டு ட்ரோன் நிறுவனங்களின் இரண்டு மாடல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பமுள்ளவற்றை விவசாயிகள் தேர்வு செய்துகொள்ளலாம். ட்ரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து, உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios