தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்கும் நிலையில் பாஜகவுக்கு சாதகமான 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிட்டன. ஆனால் காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகிய 4 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றனர்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இரு கட்சிகளும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனிடையே வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது மீண்டும் இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த தேர்தலில் 50க்கும் அதிகமான தொகுதிகளைக் கேட்டு பெற பாஜக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகளை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 15ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில் அவர் மூலம் அதிமுக தலைமையிடம் இந்தப் பட்டியலை தமிழக பாஜக வழங்க முடிவு செய்துள்ளதாம். பாஜக குறி வைத்துள்ள தொகுதிகளில் சென்னையில் மட்டும் 8 தொகுதிகள் இடம் பெற்றள்ளனவாம்.
தமிழகம் முழுவதும் பாஜக குறி வைத்துள்ள தொகுதிகள், “எழும்பூர், சோளிங்கர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், கொளத்தூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தியாகராயநகர், விருகம்பாக்கம், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர், சிங்கநல்லூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், சங்கராபுரம், பவானி, குளச்சல், கிள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளித்தலை, ஓசூர், தளி, மதுரை தெற்கு, குன்னூர், ராசிபுரம், மேட்டுப்பாளையம், ஊட்டி, பெரம்பலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 30 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என கண்டிப்பாக சொல்லவிட்டாராம்.
இதனிடையே டெல்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலாசீதாராமன் அவர்களை சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற“தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள் உடன் இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.


