ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர் தேங்கிய விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜி20 தலைமை பிரேசில் நாட்டிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாடானது டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதனிடையே, டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. அந்த வகையில், ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கி உள்ளதாக வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

Scroll to load tweet…

இந்த நிலையில், ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர் தேங்கிய விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர்.

Scroll to load tweet…

ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜி20 மாநாட்டையொட்டி, டெல்லி பிரகதி மைதானத்தில் சுமார் 123 ஏக்கரில் அமைந்துள்ள இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகமானது அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறும் வகையில், மறுசீரமைக்கப்பட்ட இந்த வளாகம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள உள் அரங்கங்கமான, மறுவடிவமைக்கப்பட்ட நவீன சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (IECC) உலகின் சிறந்த 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்!

ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். டெல்லியில் நடைபெற்ற 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.