இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நெய்வேலி திமுக எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழா நெய்வேலியில் நடைபெற்றது. ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று விட்டதால், அவருக்கு பதிலகாக இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்தி. அதை பொய்யாக திரித்து இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். சனாதனத்தை பற்றி இப்போது பேச வில்லை. 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவோம். ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரை போட்டு மூடியதுதான் மத்திய அரசின் சாதனை. பாஜகவின் ஊழல்கள் வெளிப்பட்டு வருகிறது, அதை மறைக்கவே என் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகின்றன.” என்றார்.
இந்த நிலையில், சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சபா ராசேந்திரனை - சபாஷ் ராசேந்திரன் என்று சொல்லத் தோன்றும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருக்கின்றன் என பாராட்டினார். மேலும், மணமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து கொண்டார்.
டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும். ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்.” என்றார்.