திருச்செங்கோட்டில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், விஜய் உடன் இணைந்ததற்காக மாணவிகள் தன்னை வாழ்த்தியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 2026-ல் மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் தெரிவித்தார்.

"நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது, 50 மாணவிகள் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, 'நீங்கள் விஜய் உடன் இணைந்ததற்காக வாழ்த்துகிறோம்' என்று சொன்னார்கள்" என்று தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தவெக கூட்டணி கணக்கு

கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசினார்.

"அ.தி.மு.க.-வில் இருந்து மட்டுமல்ல, தி.மு.க.-வில் இருந்தும் கூட 'தவெக'-வில் இணைகிறார்கள். NDA கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படிச் செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று செங்கோட்டையன் கூறினார்.

மாணவிகளின் நெகிழ்ச்சி வாழ்த்து

விஜய் மீதான இளைஞர்களின் ஈர்ப்பை விளக்கும் விதமாக அவர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"நான் இரண்டு மருத்துவர்களின் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே 50 மாணவிகள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். என்னோடு ஏன் செல்ஃபி எடுக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் விஜய் உடன் இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களை வாழ்த்துகிறோம்' என்று சொன்னார்கள்."

"த.வெ.க.-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். த.வெ.க.-விற்குப் போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது."

விஜய்யை விட்டால் யாரும் இல்லை

"மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சர் ஆவார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களைத் தட்டியெழுப்பும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது. 2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றைப் படைப்போம்.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். சேர வேண்டிய இடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன்," என செங்கோட்டையன் தெரிவித்தார்.