எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எப்படி இருந்தேனோ அது போன்று தமிழக வெற்றி கழகத்தில் எனக்கு வரவேற்பு இருக்கிறது மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில் வருகின்ற 18ம் தேதி தாவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ செங்கோட்டையன், ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ செங்கோட்டையன் கூறுகையில், வருகின்ற 18-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் காலை சரியாக 11 மணி முதல் ஒரு மணிக்குள்ளாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இந்த நிகழ்ச்சி அரசு அலுவலர்களின் கேட்டதற்கு ஏற்ப பணிகளை செய்து வருகிறோம். பாண்டிச்சேரியை தொடர்ந்து தமிழகத்திற்கு விஜய் வருகை தருகிறார். இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். நேற்று தவெக கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விஜயை தமிழக முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வருபவர்களை அத்தனை பேரையும் அன்போடு அரவணைத்து செல்வதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கூட்டணியில் வருகின்றவர்களை வரவேற்கின்றோம். யாரை கூட்டணியில் சேர்ப்பது என்பதை தலைவர் முடிவு செய்வார்.

இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் வழங்கப்படவில்லை. காவல்துறைக்கு மட்டுமே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அறங்காவலர் மூலமாக இந்த இடம் முழுமையாக இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

இன்னொரு அதிமுகவாக தவெக மாறும் என நான் சொல்லவில்லை. நான் சொன்னது தமிழக வெற்றி கழகத்தில் பல பேர் இணைகின்ற வாய்ப்பு உள்ளது என்று தான் கூறினேன். இந்த கூட்டத்தில் கட்சியில் இணைபவர்கள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் அனைவரையும் இணைப்போம், ஒற்றுமையாக செல்வோம். நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். அதிமுகவில் உயர் மட்ட குழு வரை பதவியில் இருந்த என்னை நீக்க இயலாது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து விளக்கம் தர வேண்டும். ஏற்கனவே ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன முடிவு செய்பவர்கள் தேர்தல் ஆணையம் தான். நான் விருப்பப்பட்டு தவெகவில் சேர்ந்து விட்டேன் கடுமையாக இங்கே உழைக்க இருக்கின்றேன் என்னை வரவேற்க, வாழ்த்துகின்ற, அரவணைத்து செல்கின்ற இயக்கமாக உள்ளது.

அன்புமணி விடுத்த அழைப்பு குறித்து தலைமை முடிவு செய்யும் தமிழக வெற்றி கழகத்தில் எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எப்படி இருந்தேனோ அது போன்று தமிழக வெற்றி கழகத்தில் எனக்கு வரவேற்பு இருக்கிறது மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.