திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். கொள்கை எதிரிகள் உதயநிதியை 'மிகவும் ஆபத்தானவர்' என்று கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதியின் கொள்கை உறுதியைப் பாராட்டினார்.

"கொள்கை எதிரிகள் உதயநிதியை 'மிகவும் ஆபத்தானவர்' (Most Dangerous) என்று சொல்கிறார்கள்; அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக (Strong) இருக்கிறார், இன்னும் சொல்லப்போனால், இறங்கி அடிக்கிறார்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார்.

திருவண்ணாமலை, மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திமுகவின் இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

உதயநிதி மிகவும் ஆபத்தானவர்!

திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

"'ஏ தாழ்ந்த தமிழகமே!' என கவலைப்பட்ட காலத்தை மாற்றி, இப்போது 'திரும்பிப் பாருங்கள் தமிழ்நாட்டை' எனச் சொல்லுகிற காலத்திற்கு நாம் வந்துள்ளோம். கலைஞர் என்னைப் பற்றிக் கூறும்போது, ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கூறுவார். நானும் உதயநிதியிடம் அதே உழைப்பைப் பார்க்கிறேன்.

கொள்கை எதிரிகள் உதயநிதியை 'Most Dangerous' என்று சொல்கிறார்கள். அவர் கொள்கையில் Strong-ஆக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், இறங்கி அடிக்கிறார்!" என்று உதயநிதியின் துணிச்சலான செயல்பாடுகளைப் பாராட்டினார்.

திராவிட மாடல் ஆட்சி 2.0:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 'அடுத்த இலக்கு தமிழ்நாடு' என்ற பேச்சுக்கு பதிலளித்த முதலமைச்சர், "பீகாரை வென்றுவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான் என்கிறார் அமித் ஷா. தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதை மட்டும் வழக்கமாகக் கொண்டு பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்யும். பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் செய்து தேர்தலைச் சந்திப்பார்கள். தமிழ்நாட்டின் சுயமரியாதையை அடகு வைக்கப் பல கூட்டங்கள் வரும்." என்றார்.

"இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் மக்கள் அளிக்கப் போகும் விடைதான் திராவிட மாடல் ஆட்சி 2.0." எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

"இளைஞரணியினர்தான் திராவிட மாடல் ஆட்சி 2.0-வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். வெற்றிக்கான பயணத்தை இன்றைக்கே தொடங்குவோம். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். இளைஞரணியினர் மக்களோடு இருந்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்," என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.