திருவண்ணாமலை திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாடு மிக்க இளைஞரணியினரை கொள்கை வாரிசுகள் எனப் பாராட்டிய அவர், அதிமுகவை 'என்ஜினே இல்லாத கார்' என கடுமையாக விமர்சித்தார்.
கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக் கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத அரசியல் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக துணை முதலமைச்சரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துலகொண்டு பேசினார்.
கடலெனத் திரண்ட இளைஞரணி
மாநாட்டில் திரண்டிருந்த இளைஞரணியினருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், "திருவண்ணாமலையில் மலை இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இன்று திருவண்ணாமலையில் மலை மட்டுமல்ல... கடலும் இருக்கின்றது என்ற அளவிற்கு இங்கு குழுமி இருக்கக்கூடிய இளைஞரணித் தம்பிகளுக்கு நன்றி.” என்றார்.
“அண்ணா கட்சியைத் தொடங்கியபோதே, டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேபோல், கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டைச் சங்கிக் கூட்டத்தால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது!” எனவும் சூளுரைத்தார்.
இது கொள்கைக் கூட்டம்!
திமுக இளைஞரணியின் செயல்பாடுகளைப் பாராட்டி அவர் ஆற்றிய அவர், "இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை இளைஞரணி செய்து காட்டியுள்ளது. இளைஞரணித் தொண்டர்கள் அனைவரும் திமுக கொள்கையின் வாரிசுகள்தான்.
"இளைஞர்களை அதிகமாகக் கூட்டினால் கட்டுப்பாடு இருக்காது என்ற பிம்பம் இப்போது உள்ளது. இது வெறும் கணக்கு காட்டும் கூட்டம் அல்ல; மாறாக, எதிரிகள் போடும் கணக்கை சுக்குநூறாக உடைக்கும் கொள்கைக் கூட்டம் இது." என்றார்.
மதவாத யானையை அடக்கும் அங்கம்
தமிழகத்தில் மதவாத அரசியலைப் புகுத்த முயலும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின், "பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்று வட மாநிலங்களில் அவர்கள் (பாஜக) வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் கணக்கு ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்றார்.
மேலும், "பாஜகவின் மதவாதம் என்ற மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது." எனவும் குறிப்பிட்டார்.
'என்ஜினே இல்லாத கார்' அ.தி.மு.க.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
"2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அ.தி.மு.க.-வில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. என்பது என்ஜினே இல்லாத கார். அதை எவ்வளவு தள்ளிவிட்டாலும் ஓடாது," என்று கேலியாகப் பேசினார்.


