திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமித் ஷா மட்டுமல்ல, அவரது சங்கிப் படையே வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்று அவர் சவால் விடுத்தார்.
"பீகாரை வென்றுவிட்டோம், இனி அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று அமித் ஷா சொன்னாலும், அவர் மட்டுமல்ல, அவரது சங்கிப் படையே வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக சவால் விடுத்தார்.
திருவண்ணாமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மாஸாகத் தொடங்கிய உரை
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மாஸாக, கெத்தாக இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்" என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த அமைச்சர் எ.வ. வேலுவை முதலமைச்சர் பாராட்டினார். "எ.வ.வேலுவிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அளவுக்கு மிகச் சிறப்பாக வேலைகளை முடித்துவிடுவார்," என்று புகழாரம் சூட்டினார்.
50 ஆண்டுகள் பின்னோக்கி…
இளைஞரணித் திரளைப் பார்த்தபோது தனது பழைய நினைவுகள் வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார். "உங்களைப் பார்க்கும்போது 50 ஆண்டுகள் 'டைம் ட்ராவல்' செய்து பின்னால் போனது போல இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞரணியை வளர்த்தெடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது. இளைஞரணியினரின் எனர்ஜி இப்போது எனக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருக்கிறது.” என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், “திமுகவை அண்ணாவுக்கு 40 வயது இருக்கும்போதும், கருணாநிதிக்கு 25 வயது இருக்கும்போதும் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் இது” என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
அமித் ஷாவுக்குப் பதிலடி
பாஜகவின் இலக்கு குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பதிலடி கொடுத்தார்.
"பீகாரை ஜெயித்துவிட்டோம் இனி அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான் என்கிறார் அமித் ஷா. அமித் ஷா மட்டுமல்ல, சங்கிப் படையே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது! ஏனென்றால் இது தமிழ்நாடு. எங்கள் கேரக்டரையே நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீகறீங்களே!" என்று சவால் விடும் தொனியில் பேசினார்.
"தமிழ்நாட்டை இருட்டுக்குள் தள்ளும் அனைத்தையும் எதிர்த்துத் தோற்கடித்துப் புது வரலாறு படைத்தோம். திமுக 'எடுத்தோம், கவிழ்த்தோம்' என எதையும் செய்துவிடவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.


