டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்
இந்திய மண்ணில் உலகளாவிய தலைவர்களின் முக்கியமான கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஜி20 தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் இந்தியா, அவர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நேற்றைய கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில், கலந்து கொள்வதற்காக பல்வேறு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை!
அதனையேற்று முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஜோ பைடனுடன் முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடினார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்றைய கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இது, அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.