மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை!
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்
ஜி20 அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
முதல் நாளான நேற்று ஜி20 தலைவர் என்ற வகையில், மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
டெல்லி மாநாட்டில், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. ஜி20 டெல்லி பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தப் பிரகடனத்தில் தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெல்லி பிரகடனத்தில் உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கவுள்ளதாக அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் தெரிவித்துள்ளார்.
ஜி20 செயற்கைக்கோள்.. உலக நாடுகளுக்கு வானிலை தகவல்கள்.. பிரதமர் மோடி கொடுத்த சூப்பர் அப்டேட் !!
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முதள் நாள் கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றன. நேற்றையை கூட்டம் முடிந்த பிறகு, இரவில் குடியரசுத் தலைவர் ஜி20 தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இதில், முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனிடையே, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பலர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.