சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது எனக்கூறி துணை முதல்வர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
பீகாரில் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு கணிசமான சீட்டுகளை திமுக குறைக்கலாம் என தகவல் பரவின. இதனால் காங்கிரஸ் திமுகவை விட்டு விலகி விலகி தவெக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவின. விஜய் காங்கிரசுக்கு புதியவர் அல்ல என அக்கட்சியின் தலைவர்கள் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் கூறியிருந்தனர்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?
மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும், நாங்கள் உவி இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் தவெக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுகள் அதிகமாகி இருந்த நிலையில், காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருந்து ஒருபோதும் பிரியமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதியும், செல்வபெருந்தையும் ஒரே மேடையில் இன்று அறிவித்துள்ளனர்.
எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது
அதாவது சென்னையில் திமுக ஆதரவாளர் செந்தில்வேல் எழுதிய திராவிடம் 2.0 நூல் வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய செல்வபெருந்தகை, ''இரண்டு, மூன்று மாதமாக மிகப்பெரிய சலசலப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக, காங்கிரஸ் கூட்டணி என்னவாகப் போகிறது? எந்த திசையில் செல்லப் போகிறது? என்று நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். அதையெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் இன்னும் ஓரிரு மணித்துளிகளில் ஒரு அறிவிப்பு வரும். எந்த காலத்திலும் இந்தியா கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. இது வலிமையாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
உதயநிதியின் பேச்சு
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''நான் இந்த விழாவுக்கு வரும்போது செல்வபெருந்தகை அண்ணன் இல்லை. வேறு விஷயமாக சென்று விட்டு உடனே வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள். செல்வபெருந்தகை வரவில்லை. அவர் வருவாரா? மாட்டாரா? (நிகழ்ச்சிக்கு) என பேச ஆரம்பித்தனர்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்
உடனே பத்திரிகை நண்பர்கள் 'உதயநிதி அப்செட்; செல்வபெருந்தகை ஆப்சென்ட்' என தலைப்பு ரெடி செய்து வைத்திருந்தார்கள். கடைசியில் அவரும் வந்து விட்டார். செல்வபெருந்தகை முன்பு பேசியபடி அவரும், அவரின் இயக்கமும் சரியான நேரத்தில் வந்து விட்டார்கள். ஆனால் போனால் தானே வர முடியும். சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்'' என்று தெரிவித்தார்.


