தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மறைமுகமாக பேசியுள்ளது உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியை தக்க வைப்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் வரும் தேர்தலில் கூடுதல் சீட் கேட்பது மட்டுமின்றி ஆட்சியிலும் பங்கு கேட்டு வருகிறது.
தவெக பக்கம் செல்லும் காங்கிரஸ்?
பீகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழக தேர்தலில் காங்கிரசுக்கான சீட்டுகளை திமுக குறைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுக அதிக சீட் கொடுக்க மறுத்தால் காங்கிரஸ் தவெக பக்கம் செல்லும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தியா கூட்டணி வலிமையுடன் உள்ளது
இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை மறைமுகமாக பேசியுள்ளது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையுடன் உள்ளது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் சீட் கேட்போம். நீங்கள் தான் பல்வேறு வியூகங்களை சொல்கிறீர்கள்.
பெட்ரோல் கதையை கூறிய செல்வபெருந்தகை
இறுதி முடிவை காங்கிரஸ் தலைமை எடுக்கும். கூட்டணி என்பது ஒன்னும், ஒன்னும் ரெண்டு கிடையாது. ஒன்னும் ஒன்னும் பதினொன்னு. 900 மி.லி பெட்ரோல் உங்களிடம் இருக்கிறது. என்னிடம் 100 மி.லி பெட்ரோல் உள்ளது. நீங்கள் இங்கு இருந்து திருச்சி விமான நிலையம் செல்ல வேண்டுமென்றால் 1,000 மி.லி பெட்ரோல் அதாவது 1 லிட்டர் பெட்ரோல் தேவை.
எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்
900 மி.லி பெட்ரோல் போட்டால் நீங்கள் விமானத்தை பிடிக்க முடியாது நடுரோட்டில் நின்று விடுவீர்கள். இந்த 100 மி.லி பெட்ரோலும் அதில் சேர்ந்தால் தான் விமானத்தை பிடிக்க முடியும். இதைவிட விளக்கி சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இதுதான் கூட்டணி ஒன் பிளஸ் ஒன். இது எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்'' என்று தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு மறைமுகமாக உணர்த்திய செல்வபெருந்தகை
செல்வபெருந்தகை இந்த பெட்ரோல் கதையின் மூலம் 900 மி.லி திமுக என்றும், 100 மி.லி காங்கிரஸ் என்றும் சொல்லாமல் சொல்லியுள்ளார். அதாவது காங்கிரஸ் இல்லாமல் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். செல்வபெருந்தகையின் இந்த பேச்சால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
