பாஜக எத்தனை அடிமையை கூட்டணிக்குள் சேர்த்தாலும் திமுக இருக்கும் வரை தமிழகத்தை தொட முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விஜய்யை அடிமை என குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தமிழக அரசு பக்கம் உள்ளன. அதிமுக, பாஜக,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக உள்ளன.
திமுக அரசுக்கு அதிராக பாஜக
கரூர் சம்பவம் குறித்து பாஜக அமைத்த ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் அடங்கிய என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழுவினர் கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக அரசு தான் காரணம் என்று என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழு அறிக்கை வெளியிட்டது.
விஜய்க்கு கொக்கி போடும் பாஜக
பாஜகவை தங்களது கொள்கை எதிரி என்று தொடர்ந்து கூறி வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு பிறகு பாஜகவிடம் நெருக்கம் காட்டியதாக தகவல் வெளியாகி இருந்தது. அமித்ஷாவிடம் விஜய் பேசியதாகவும், தவெகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்வது வருவதாகவும் தகவல்கள் கூறின. திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனும் இதே கருத்தை தான் முன்வைத்து இருந்தார்.
பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
இந்நிலையில், பாஜக யாரை சேர்த்து போட்டியிட்டாலும் திமுக இருக்கும் வரை தமிழகத்தை நெருங்க முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ''எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைய வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் பாஜக அதிமுகவின் துணையோடு இன்று வந்து கொண்டிருக்கிறது. பழைய அடிமை பழனிசாமி மட்டுமின்றி, இப்போது புது அடிமைகளையும் பாஜக வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.
புது அடிமை வந்தாலும் முடியாது
எப்படியாவது புது அடிமை நம்மிடம் மாட்டிவிட மாட்டார்களா? என்று பாஜக வலைவீசி தேடுகிறது. அடிமைகள் சிக்குவார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுக காரன் கருப்பு சிகப்பு கலர் போட்டிருக்க கூடிய திமுக காரன் இருக்கிற வரைக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்குள் கால் வைக்கிறது இல்ல; தொட்டுக்கூட உங்களால் பார்க்க முடியாது'' என்று தெரிவித்தார். பாஜக விஜய்யுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் உதயநிதி புது அடிமை என்று விஜய்யை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
