Hindu Munnani: கோவில் இடங்களில் கல்லூரிகள் கட்ட தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவிற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது கோவில் சொத்துக்களை அழிக்கும் சதி என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ள இந்து முன்னணி.

இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவில் இடங்களில் கல்லூரி துவங்க தமிழக அரசு மசோதா தாக்கல் செய்து அவசரம் அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஒரே நாளில் 16 மசோதாக்கள் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்டதே ஜனநாயக கேலிக் கூத்து. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் சதியை அதிமுக எம்ஏல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டித்து எதிர்த்துள்ளார். அவரை இந்து முன்னணி மனதாரப் பாராட்டுகிறது. நீதிமன்றம் பலமுறை கோவில் சொத்துகள், நிதி, கோவில் இடங்கள் ஆகியன கோவிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய பிறகும், திமுக அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

கோவில் சொத்துக்கள் கபளீகரம்

இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் நிதி, தங்கம், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. விஞ்ஞானப்பூர்வமான ஊழலில் கைதேர்ந்தது திமுக என்று நீதியரசர் சர்காரியா தெரிவித்த கருத்து இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்வதில் திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது? சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே எங்கள் கொள்கை என்று துணை முதல்வரான உதயநிதி கூறினார். அதனை அருகில் இருந்து கைதட்டி வரவேற்றவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த கொள்கையை மறைமுகமாக நிறைவேற்றவே கோவில் சொத்துக்களை அழிக்க இத்தகைய திட்டங்களை வகுக்கிறார் என இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

கபட நாடகம் ஆடுகிறது திமுக அரசு

கோவில் இடங்கள், நிதி ஆகியவற்றை ஒழித்துவிட்டால் தற்போது பல்லாயிரம் கோவிலில் விளக்கு ஏற்ற, வழிபாட்டிற்கு வழியில்லாமல் பாழடைந்து பூட்டி கிடப்பதை போல் பிரபல கோவில்களின் நிலையை ஏற்படுத்திடவே இத்தகைய திட்டங்களை மக்கள் நலன் என்ற போர்வையில் சட்டசபையில் அமைச்சர் மசோதாவை நிறைவேற்றியுள்ளார். தங்களது செயல்பாட்டினை மூடி மறைக்க இசைக் கல்லூரி, வேத பாராயணம் நடத்தவும் என அதில் கண்துடைப்பாக சேர்த்துள்ளனர். இந்துக்கள் ஏமாளிகள் என்ற நினைப்பிலும், நீதிமன்றத்தின் கவனத்தை திசைத்திருப்பவும் இந்த வார்த்தைகளை சேர்த்து கபட நாடகம் ஆடுகிறது திமுக அரசு.

இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இந்த மசோதா சட்டவிரோதமானது. இதனை தமிழக ஆளுநர் ஏற்கக்கூடாது என்று இந்து முன்னணியின் சட்டக்குழு, மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து மனு அளிக்கும். தமிழக அரசு நிறைவேற்றி உள்ள இந்து கோவில் இடங்களில் கல்லூரி கட்ட அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசின் இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து எதிர்க்கவும், சிவனடியார் முதலான இந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.