பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்கவே பொதுசிவில் சட்டம்.. ஆளுநரையும் மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்னா அறிவாலயத்தில் துர்கா ஸ்டாலின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் உரையாற்றிய ஸ்டாலின் “ இன்று வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். உளறிக்கொண்டிருக்கிறார். ஆனால் யார் என்று சொல்லவிரும்பவில்லை. அது தமிழ்நாட்டிற்கே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறதோ. அதே போல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சியும் தேவை.
மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சி பொறுப்பெற்றதில் இருந்து மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு, பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாஜக கொள்கைகளை அதில் சேர்க்க உள்ளனர். அவர்களின் ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்திலே, மக்களுக்கு துன்பங்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்கின்றனர். ஏற்கனவே அவர்களை எதிர்க்க கூடியவர்களை, சிபிஐ, ஐடி, இடி போன்ற துறைகளை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி ஒன்றிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக பேசினார். மத்திய பிரதேசத்தில் கூட பிரதமருக்கு திமுகவின் நினைவு தான் வந்திருக்கிறது. அவரின் இந்த கருத்துக்கு இது குடும்பக் கட்சி தான் என்று சொன்னேன். தமிழகம் தான் திமுகவின் குடும்பம் என்று கூறியிருந்தேன்.” என்று தெரிவித்தார்.
சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார். இந்த நிலையில் ஆளுநரை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.