தென்காசியில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்த நிலையில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இன்று காலை வழக்கம் போல தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு மற்றொரு தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. இந்த நிலையில் திடீரென இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று சொல்லப்படுகிறது. அசுர வேகத்தில் வந்த பேருந்து திடீரென எதிர் திசையில் வந்த மற்றொரு பேருந்தில் மோதியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனனர்.
காயமடைந்தவர்கள் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


