- Home
- இந்தியா
- திருமண நாளில் விபத்து! ஐசியூவில் மணப்பெண்! முகூர்த்த நேரத்தில் மணமகன் எடுத்த முடிவு! சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருமண நாளில் விபத்து! ஐசியூவில் மணப்பெண்! முகூர்த்த நேரத்தில் மணமகன் எடுத்த முடிவு! சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருமண நாளன்று மேக்கப் முடித்து திரும்பிய ஆசிரியை ஆவணி கார் விபத்தில் படுகாயமடைந்தார். முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் ஷாரோன் குறித்த முகூர்த்த நேரத்தில் மருத்துவமனைக்கே வந்து அவருக்கு தாலி கட்டினார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தும்போலி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலை மேக்கப் செய்வதற்காக ஆவணி தன்னுடைய தோழிகள் 3 பேருடன் காரில் கோட்டயத்திற்கு சென்றுள்ளார். மேக்கப் முடித்துக்கொண்டு மண்டபத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆவணி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். மணப்பெண் ஆவணிக்கு கால் மற்றும் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த மணமகன் ஷாரோன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆவணியை பார்த்ததும் ஷாரோன் கண் கலங்கினார்.
முகூர்த்த நேரம் நெருங்கியதால், அந்த நேரத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என இரு வீட்டாரும் மணமகனிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து ஆவணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசித்த போது அவர்களும் அதற்கு சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் வைத்து குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்கு ஷாரோன் தாலி கட்டினார். இருப்பினும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தடபுடலாக விருந்து உபசரித்து அனுப்பினர்.

