Asianet News TamilAsianet News Tamil

பாஜக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அமலாக்கத்துறை? தலித் விவசாய சகோதரர்கள் புகார்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்

Two elderly Dalit farmers summoned by ED compliant against them smp
Author
First Published Jan 2, 2024, 5:19 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் 70 வயதுடைய கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க இயக்குநரகத்திடம் (ED) இருந்து சம்மன் வந்துள்ளது. பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையிடம் இருந்து 6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும், அதுவும் சட்டசிக்கலில் இருக்கும் விவசாயிகளுக்கு சம்மன் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய சகோதரர்களை விசாரணைக்கு எதற்காக அழைத்துள்ளார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியாதபட்சத்தில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள கவரில் முகவரி எதுவும் இல்லாமல் அவர்களது பெயர்களுக்கு கீழ் இந்து பள்ளர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டும் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசின் ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியத்தில் தாங்கள் வாழ்க்கை நடத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார் விவசாயிகளுக்கு வழங்கிய ஜூன் 26, 2023 தேதியிட்ட சம்மனில், விசாரணை அதிகாரி (IO) ரித்தேஷ் குமார் பணமோசடி தடுப்பு சட்டம் 2002 விதிகளின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார். கண்ணையனும், கிருஷ்ணனும் ஜூலை 5, 2023 அன்று ஏஜென்சியின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். “​​மேற்படி சட்டத்தின் 50ஆவது பிரிவின் துணைப் பிரிவு (2) மற்றும் துணைப் பிரிவு (3) ஆகியவற்றின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்படி கண்ணையன் S/o சின்னசாமி என் முன் ஜூலை 5, 2023 அன்று ஆஜராக வேண்டும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் தங்களது பான் கார்டு நகல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வரிக் கணக்குகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நகல், செய்த முதலீடு விவரங்கள் போன்ற ஆவணங்களைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பெயரில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள அசையா சொத்துகளின் விவரங்கள், வங்கி கணக்குகள், அவர்களின் பெயரில் உள்ள நிலையான வைப்புத்தொகை விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், விவசாய நில விவரங்கள் மற்றும் பயிர் உற்பத்தி விவரங்கள் போன்ற ஆவணங்களுடன் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: அரசு துறைகளுக்கு இமாச்சல் முதல்வர் உத்தரவு!

அதன்படி, தங்களது வழக்கறிஞர்களுடன் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆஜராகியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவர் மட்டும் வழக்கறிஞர்கள் இல்லாமல் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்தும் பலனில்லை. விவசாயிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தரக்குறைவாக  பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் தாங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து இருவரும் புகார் அளித்து விட்டு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளின் வழக்கறிஞர் தலித் பர்வினா கூறுகையில், “இந்த வழக்கு தொடர்பான எந்த தகவலும் சம்மனில் குறிப்பிடப்படவில்லை. விவசாய சகோதரர்கள் இருவருக்கும் வழக்கு என்னவென்றே தெரியவில்லை. சம்மனில் முறையான ஆவணங்களுடன் அமலாக்கத்துறை ஆஜராகுமாறு கூறியதைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் ஒரே வழக்கு  அவர்களது நிலத்தை உள்ளூர் பாஜக நிர்வாகி அபகரிக்கும் நில அபகரிப்பு முயற்சி வழக்கு மட்டுமே ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தில் கண்ணையனும், கிருஷ்ணனும் 6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். தங்களது விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் குணசேகர் மீது அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக, விவசாயி கிருஷ்ணன்ச் அளித்த புகாரின் அடிப்படையில், குணசேகர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டில் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

இவர்கள் இடையேயான நிலத்தகராறு தொடர்பான சிவில் வழக்கு, ஆத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தப் பின்னணியில், விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கில் விவசாயிகளை மிரட்டி பாஜக நிர்வாகிக்கு உதவ அமலாக்கத்துறை முயற்சிக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

“நிலப்பிரச்சினையால் விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தமிழக அரசால் வழங்கப்படும் இலவச ரேஷனை நம்பியும், ரூ.1000 முதியோர் ஓய்வூதியத்தை நம்பியுமே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.” என தலித் பர்வினா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அனைத்து பதிவுகளையும் எடுத்துக்கொண்டு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானோம். அவர்கள் எங்களை மீண்டும் ஆஜராகுமாறு சொல்லியுள்ளார்கள். நாங்களே எப்படியோ வயிற்றுப்பிழைப்பை ஓட்டி வருகிறோம். எங்கள் மீது சட்டவிரோத சொத்து என்று யாராவது எப்படி குற்றம் சாட்ட முடியும்?” என விவசாய சகோதரர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு ஊரில் கட்ன வாங்கி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.450 இருந்தது என வழக்கறிஞர் தலித் பர்வினா தெரிவித்துள்ளார்.

 

 

இதனிடையே, பாஜக நிர்வாகி குணசேகரன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அமலாக்கத்துறை மற்றும் பாஜகவை அவதூறு செய்ய தமிழக காவல்துறை முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். “விவசாயிகள் மீது யார் புகார் அளித்தனர், எப்படி விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது என்ற தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.” என சக நிர்வாகியான குணசேகரனுக்கு சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பி.சண்முகநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். சேலம் காவல் கண்காணிப்பாளருக்கு அவர்கள் அளித்துள்ள புகாரில், தங்களது சாதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது கண்டி அதிர்ச்சியடைந்ததாகவும், குணசேகரன் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்களது எதிரிகள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் அப்புகாரில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios