பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: அரசு துறைகளுக்கு இமாச்சல் முதல்வர் உத்தரவு!
இமாச்சலப்பிரதேச மாநில அரசு துறைகள் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
பசுமை மற்றும் தூய்மையான இமாச்சல்பிரதேசம் என்ற இலக்கை அடையும் நோக்குடனும், இ-வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில அரசுத்துறைகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை தேவைப்பட்டால், மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அம்மாநில அரசுத் துறைகள் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்க முடியும். முதல்வர், தனது முதல் பட்ஜெட் உரையில் மாநிலத்தின் பசுமையை மீட்டெடுக்கும் பொருட்டு, மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு விதிகளை அறிவித்தார்.
மேலும், கடந்த பல மாதங்களாக இ-வாகனத்தை பயன்படுத்தி முதல்வர் முன்னுதாரணமாக திகழ்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அரசின் தொடர் முயற்சியால், அரசு மின் வாகனங்களின் எண்ணிக்கை 185 ஆகவும், தனியார் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2,733 ஆகவும் உள்ளது.
இரவு விடுதியில் குத்தாட்டம் போட்டு புத்தாண்டை வரவேற்ற அமைச்சர் ரோஜா
“எங்கள் அரசாங்கம் இமாச்சலில் மின் வாகனங்களை பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. போக்குவரத்துத் துறையானது அதன் அதிகாரப்பூர்வ வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றியமைக்கும் முதல் துறையாகிறது. மற்ற துறைகளும் இதனை பின்பற்ற வேண்டும்.” என கேட்டுக் கொண்டார்.
அனைத்து துறைகளும் தங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களை மாற்றுவதை படிப்படியாக உறுதி செய்யும். இ-வாகனங்களின் பயன்பாடு ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது எனவும் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார். வருங்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இன்றிலிருந்தே அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தரையிறங்கும் போது தீப்பிடித்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: 400 பயணிகள் உயிர் தப்பினர்!
அரசு துறைகளில் வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய, ஒப்பந்த அடிப்படையில் இ-டாக்சிகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.680 கோடியில் ராஜீவ் காந்தி சுயவேலைவாய்ப்பு ஸ்டார்ட்-அப் திட்டத்தின் கீழ், இ-டாக்சி வாங்குவதற்கு இளைஞர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.