- Home
- Business
- நீடிக்கும் போர் பதற்றம்.! இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? மத்திய அரசு கூறுவது என்ன?
நீடிக்கும் போர் பதற்றம்.! இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? மத்திய அரசு கூறுவது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள விளக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் உயர்வு
உலக நாடுகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் போர் பதற்றமானது உலகளவில் ஓர் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார நெருக்கடிகள், தங்கம் வெள்ளி விலை உயர்வு, சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை போன்ற அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா என்கிற கவலை மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
போதிய கையிருப்பு உள்ளது
போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பரவும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது சுமார் 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நிலைமையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நாளொன்றுக்கு இரண்டு முறை ஆய்வு செய்து வருகிறது. எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியால் பாதிப்பு இல்லை
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கினால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஆனால் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 40% மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. மீதமுள்ள 60% எண்ணெய் ரஷ்யா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற மாற்று வழிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கினாலும் பிறமூலங்கள் வழியாக எண்ணெய் இறக்குமதி எந்த தடையும் இல்லாமல் இந்தியா பெறக்கூடும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
எல்பிஜி விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அரசு சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஈட்டிய லாபத்தை கொண்டு தற்போதைய விலை ஏற்றத்தை சமாளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சர்வதேச சூழலால் எல்பிஜி சிலிண்டர் விலையில் மார்ச் 7, 2026 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேண்டுகோள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்கவோ அல்லது எரிபொருளை சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

