- Home
- Business
- வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ஏப்ரல் 1 முதல் டோல் பூத் காணாமல் போகப் போகுது.! பணம் செலுத்துவது எப்படி? முழு விவரம்.!
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ஏப்ரல் 1 முதல் டோல் பூத் காணாமல் போகப் போகுது.! பணம் செலுத்துவது எப்படி? முழு விவரம்.!
Barrier-Free Toll Plaza : இந்திய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ‘தடையில்லா சுங்கசாவடி’ முறை அமலுக்கு வர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Barrier-Free Toll gates From April 1
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த ‘தடையில்லா சுங்கச்சாவடி’ முறையை கொண்டு வந்துள்ளது. தற்போது ‘ஃபாஸ்ட் டேக்’ முறையில் வாகனங்கள் சுங்கச் சாவடியில் நின்று செல்ல வேண்டும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறைப்படி வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்கத் தேவையில்லை. இது இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இயங்குகிறது.
தடையில்லா சுங்கச்சாவடிகள்
சாலைகளின் மேலே பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன கேமராக்கள் (ANPR - Automatic Number Plate Recognition) வேகமாக செல்லும் வாகனங்களில் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கும். இந்த கேமராக்கள் வாகனங்கள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் அதன் பதிவு எண்ணை அடையாளம் கண்டுவிடும். பின்னர் அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வங்கி கணக்கை கண்டறிந்து அதில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டாவது முறையில் GNSS (Global Navigation Satellite System) செயற்கைக்கோள் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் வாகனம் நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பது கணக்கிடப்படும்.
முக்கிய அம்சங்கள்
தற்போது ஒரு சுங்கச் சாவடியை தாண்டினால் முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதிய முறையில் நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் சரியான கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். சுங்கச் சாவடிகளில் உள்ள தடுப்பு கம்பிகள் நீக்கப்படும். வாகனங்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் தானாகவே கட்டணம் கழிக்கப்படும். உள்ளூர் வாசிகள் மற்றும் குறுகிய தூரம் பயணிப்பவர்களுக்கு ஏதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் 20 கிலோமீட்டர் தூரம் வரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் என்ன நடக்கும்?
சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்பவர்கள் அல்லது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்படும். வாகனத்தை வேறு ஒருவருக்கு மாற்றும் பொழுது நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். காப்பீடு பெறுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலின் படி விதிகளை மீறுபவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்துடன் அபராதங்கள் விதிக்கப்படும். இந்த விவரங்கள் தேசிய வாகன பதிவுத்துறையில் பதிவேற்றம் செய்யப்படும்.
புதிய நடைமுறையால் கிடைக்கும் நன்மைகள்
இந்த புதிய முறையால் சுங்க சாவடிகளில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனத்தை அடிக்கடி நிறுத்தி எடுப்பதன் மூலம் வீணாகும் எரிபொருள் மிச்சமாகும். பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது. பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பெரும் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் பெருமளவிற்கு குறையும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்ட் டேக் முறை கொண்டுவரப்பட்ட நிலையில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் செலுத்தும் இந்த புதிய முறையானது சுங்க கட்டணம் செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமல்
தற்போதைக்கு குஜராத் மாநிலத்தின் சூரத் உள்ளிட்ட சில நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மிக எளிதாகவும், வேகமாகவும் செல்ல முடியும். இருப்பினும் தங்கள் கணக்குகளில் போதிய பணம் இருப்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ளவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

