தவெகவின் விஜய் கொங்கு மண்டலத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கை தொடங்கியிருக்கிறார். அவரை நோக்கி இளைஞர்கள் பட்டாளம் திரண்டிருக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தை விஜய் அசைத்து பார்ப்பாரா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

TVK Vijay Targets Kongu Mandalam votes: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. 

விஜய் முன்னெடுக்கும் அரசியல்

நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து நிற்கும் என்றே கூறப்படுகிறது. இந்த கட்சிகளை தவிர்த்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக தான். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகியவை திராவிட கொள்கையை கொண்டுள்ளன. பாஜக தேசிய கொள்கையை பின்பற்றுகிறது. நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்தி வருகிறது. 

ஆனால் திராவிடம், தமிழ் தேசியம் என இரண்டையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தவெக தான். திராவிடத்தின் சில கொள்கைகளை கையில் எடுத்துள்ள விஜய், மாநில உரிமை குறித்தும் அழுத்தம் திருத்தமாக பேசத் தொடங்கியுள்ளார். திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சூளுரைத்து வரும் விஜய், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக கூறி பாஜகவையும் கடுமையாக தாக்கி வருகிறார்.

தவெகவினரால் ஸ்தம்பித்த கோவை! கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

தவெகவின் பூத் கமிட்டி கருத்தரங்கு 

விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்து தமிழக அரசியலில் புதிய அதிசயத்தை நிகழ்த்தும் என்று கூறிய விஜய், தவெகவை சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். தேர்தல்களில் பூத் கமிட்டி என்பது மிக முக்கியமானது. திமுக, அதிமுக என பெரிய கட்சிகளும் சிறிய கட்சிகளும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

அந்த வகையில் தவெக பூத் கமிட்டியை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தவெகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் கோவையில் நேற்று தொடங்கியது. 2வது நாளாக இன்றும் நடக்கிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட விஜய், 'இது வெறும் வாக்குகளுக்காக மட்டும் நடக்கும் கருத்தரங்கு அல்ல. மக்களோடு மக்களாக நாம் எப்படி ஒன்றிணையப் போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை' என்று கூறியுள்ளார்.

அணி திரளும் இளைஞர்கள் பட்டாளம் 

ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற முக்கியமானதாக கருதப்படும் பூத் கமிட்டியின் கருத்தரங்கை கொங்கு மண்டலத்தில் விஜய் தொடங்கி இருப்பது தான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொங்கு மண்டலம் என்பது மிகவும் முக்கியமானது. மாநிலத்திலேயே அதிகம் தொழிற்சாலைகள், தொழில் வளம் மிகுந்த கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

தேர்தலில் கொங்கு மண்டலத்தின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சரியாக புரிந்து கொண்டுள்ள விஜய், கொங்கு மண்டலத்தின் வாக்குகளுக்கு குறிவைத்துள்ளார். இதன் காரணமாகவே பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு அமைத்து கொங்கு மண்டல இளைஞர்களுக்கு வலைவீசியுள்ளார். தமிழ்நாட்டில் இப்போது இரண்டே கட்சிகளுக்கு தான் இளைஞர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது. அதில் ஒன்று நாம் தமிழர் கட்சி. மற்றொன்று தவெக.

கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா?

இதில் தவெக ஒருபடி முன்னே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தவெக மாநாட்டிலும், விஜய் செல்லும் இடங்களிலும் கூடும் இளைஞர்கள் கூட்டத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நேற்று கூட விஜய்யை காண கோவை விமான நிலையத்தில் கூடிய கூட்டமும், பூத் கமிட்டி கருத்தரங்கு நடந்த கட்டடத்துக்கு வெளியே கூடிய கூட்டமும் மற்ற கட்சிகளுக்கு கொஞ்சம் பீதியை ஏற்படுத்தி இருக்கும் என்று சொன்னால் மிகையல்ல. கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது என்ற கருத்துகளை முன்வைத்தாலும், விஜய்க்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் பட்டாளம் திரண்டு கொண்டே இருப்பதால் அவர்களை வெறும் ரசிகர்கள் என்று மட்டும் கருதி புறம்தள்ளி விட முடியாது.

திராவிட கட்சிகளின் கோட்டை கொங்கு மண்டலம்

மக்கள் ஒருபக்கம் இருந்தாலும், தன்னுடைய ரசிகர்கள் அதாவது இளைஞர்கள் பட்டாளத்தை நம்பியே விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அந்த இளைஞர்களின் உதவியுடன் பெரியவர்களின் வாக்குகளையும் அள்ளுவதற்காகத்தான் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கை கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து நடத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கொங்கு மண்டலத்தில் காலம், காலமாக அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் மேற்கு மண்டலம் அதாவது கொங்கு மண்டலத்தில் 65% வாக்குகளுடன் 44 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி இருந்தது. திமுகவை பொறுத்தவரை 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 24 தொகுதிகளுடன் கொங்கு மண்டலத்தில் பின்னிலையில் இருந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அங்கு அதிக தொகுதிகளை கைப்பற்றி அதிமுகவை பின்னுக்கு தள்ளியது. இதற்கு செந்தில் பாலாஜி மிக முக்கியமானவராக இருந்தார்.

கொங்கு மண்டலத்தில் அதிசயம் நடக்குமா?

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் வெற்றியை தொடரை திமுக விரும்புகிறது. அதே வேளையில் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் செல்வாக்கில் அதிமுக கொங்கு மண்டலத்தை தக்க வைக்க திட்டமிட்டு வருகிறது. இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இப்படியாக கொங்கு மண்டலம் அதிமுக, திமுக, பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இளைஞர்கள் படையுடன் அங்கு அதிசயம் நிகழ்த்த விரும்புகிறார் விஜய்.

இளைஞர்கள் துணையுடன் தவெக தகர்க்குமா?

இதனால் தான் பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு தொடங்கியிருக்கிறார் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திமுக, அதிமுக, பாஜகவுக்கு அந்த அளவுக்கு இளைஞர்கள் ஆதரவு இல்லை. ஆகையால் தனக்காக திரளும் இளைஞர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு கொங்கு மண்டலத்தை அசைத்து பார்க்க அங்கு அஸ்திவாரத்தை விஜய் தொடங்கியிருக்கிறார் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் திராவிட கட்சிகளின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை தவெக தகர்க்குமா? இல்லை அங்கு திராவிட கட்சிகளின் ஆதிக்கமே தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அவருக்கு பதிலாக மசோதா தாக்கல் செய்த ரகுபதி!