தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், விஜய் பவன் கல்யாணின் சனாதன பாதையில் செல்கிறாரா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

TVK Vijay and Pawan Kalyan Politics: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக இந்த முறை தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இந்த கட்சிகள் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் தவெக மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்?

விஜய்யின் தவெக கட்சி திராவிடம், தமிழ் தேசியம் என இரண்டையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறது. திராவிட கொள்கையை முன்வைக்கும் விஜய், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் அழுத்தமாக பேசி வருகிறார். இதனால் திமுக, பாஜக என இரண்டையும் பாரபட்சமின்றி விமர்சித்து வருகிறார். இதற்கிடையே 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த கூட்டணியில் இப்போது விஜய் சேரப் போகிறாரா? என்பதே இப்போது அரசியலில் ஹாட் டாபிக் ஆக உள்ளது.

பாஜகவை விமர்சிக்காத விஜய் 

பாஜகவை கடுமையாக எதிர்க்கும் விஜய் எப்படி அந்த கூட்டணியில் சேருவார்? என உங்களுக்கு கேள்வி எழும்பலாம். தொடக்கதில் திமுகவும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்த விஜய், கடந்த சில நாட்களாக பாஜகவை அந்த அளவு விமர்சனம் செய்யவில்லை. கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை விமர்சித்தாரே தவிர, பாஜகவை விமர்சிக்கவில்லை. மேலும் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது தான் புத்திசாலித்தனம் என விஜய பேசியிருப்பது அதிமுக, பாஜக கூட்டணிக்கு அவர் செல்லப்போகிறாரோ என்ற கேள்வியை தூண்டியுள்ளது.

பவன் கல்யாண்-விஜய் அரசியல் ஒன்றா 

நடிகர் விஜய்யை போல் அரசியலில் கொடிகட்டி பறப்பவர் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண். இந்துத்வா மீது அதிக பற்று கொண்ட பவன் கல்யான் சனாதன பாதையை பின்பற்றுகிறார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பவன் கல்யாண் உதயநிதியை கடுமையாக எதிர்த்தார். இதனால் பாஜக கூட்டணிக்குள் செல்வதன் மூலம் நடிகர் விஜய்யும் பவன் கல்யாணின் சனாதன பாதையை பின்பற்றப் போகிறாரா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

சனாதன பாதையில் விஜய்?

ஆனால் நடிகர் விஜய் ஒருபோதும் பவன் கல்யாணை போன்று சனாதன பாதையை தேர்வு செய்ய மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஆந்திர அரசியல் என்பது வேறு. தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு. ஆந்திர அரசியலை பொறுத்தவரை அநத மாநில மக்கள் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எனவே பவன் கல்யாண் அந்த மாநில மக்கள் விரும்பும் சனாதன பாதையை தேர்வு செய்துள்ளார். 

தமிழ்நாட்டின் அரசியல் இதுதான் 

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை மதத்தை விட மனிதம் எப்போதும் மேலோங்கியிருக்கும். இங்கு மக்கள் பக்தியாகவும் இருப்பார்கள். பகுத்தறிவுடனும் செயல்படுவார்கள். தந்தை பெரியார் மதங்களில் உள்ள சில மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார். அதே போல் தமிழ்நாட்டு மக்கள் பக்திமிக்கவர்களாக இருந்தாலும் தேவையில்லாத மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்கியது இல்லை. இதில் தான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது. இதனால் தான் திராவிட கட்சிகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன.

தவெகவின் கொள்கைத் தலைவர்கள் 

இதை நன்கு உணர்ந்தவர் தான் நடிகர் விஜய். எனவே தான் அவர் ஒருபக்கம் திராவிட கொள்கையையும், மறுபக்கம் மாநில உரிமை கொள்கையையும் கையில் ஏந்தியுள்ளார். சனாதனத்தை கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக தவெக கொண்டுள்ள நிலையில், விஜய் பவன் கல்யாணின் சனாதன கொள்கை பக்கம் செல்லவே மாட்டார் என விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

விஜய்க்கு நன்றாக தெரியும்

பாஜக அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மதிப்பதில்லை. தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை; திட்டங்கள் கொண்டு வருவதில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. விஜய்யே பல‌முறை இதை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது பாதையில் இருந்து விலகி பாஜகவின் சனாதன கொள்கை பக்கம் சென்றால் தேர்தலின்போது தமிழ்நாட்டு மக்கள் தனக்கு என்ன பதிலடி கொடுப்பார்கள் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விஜய்யின் முடிவு இதுதான் 

மேலும் விஜய்யை பொறுத்தவரை மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். இதனால் தான் பெரியாரின் அனைத்து கொள்கையையும் ஏற்றுக் கொண்ட விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பு என்ற கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தவெகவின் முதல் மாநாட்டிலேயே தெளிவுப்படுத்தி விட்டார். ஒருபக்கம் திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டி, மறுபக்கம் பாஜகவின் எதிர்ப்பையும் பதிவு செய்தால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று விட முடியும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். ஆகவே விஜய் இந்த பாதையில் இருந்து விலகி பவன் கல்யாணின் சனாதன பாதையை தேர்வு செய்ய மாட்டார் என்பதே தவெக நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்தாக உள்ளது.