தருமபுரியில் அரசுப் பள்ளி அருகே அமைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்றக் கோரி தவெக நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, த.வெ.க. தொண்டர் ஒருவர் காவலரின் கையைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆர்ப்பாட்டத்தின்போது, தொண்டர் ஒருவர் காவலரின் கையைப் பிடித்துக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் போராட்டம்
பாலக்கோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காகக் காவல்துறை தடுப்புகளை அமைத்திருந்தது. இருப்பினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவலரின் கையை கடித்த தொண்டர்
இந்தத் தள்ளுமுள்ளு மற்றும் கைது நடவடிக்கையின்போது, அங்கு நின்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், தன்னைத் தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்தார். இந்தக் கொடூரச் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தவெகவுக்கு அட்வைஸ்
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்குச் சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கூறிவருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் கையைக் கடித்த இந்தச் சம்பவம், தொண்டர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது.


