கேரளாவில் தெருநாய் கடி குறித்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நாடகக் கலைஞரை, நிஜமாகவே தெருநாய் ஒன்று கடித்தது. இதை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராம மக்கள் கைதட்டி ரசித்தனர். நாடகம் முடிந்த பிறகே உண்மை தெரியவந்தது.

கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய் கடி விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த கலைஞரை, ஒரு தெருநாய் கடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

கண்ணூர் மாவட்டம் மயில் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடகக் கலைஞர் ராதாகிருஷ்ணன். நேற்று மாலை, இவர் அப்பகுதியில் தெருநாய் கடி விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினார். தெருநாய்களிடம் இருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது, நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு அவர் நடித்துக் காட்டினார்.

நாய்க்கடி விழிப்புணர்வு நாடகம்

நாடகத்தின் ஒரு கட்டத்தில், தெருநாய் கடி தொடர்பான ஒரு காட்சியில் ராதாகிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு தெருநாய் திடீரென ராதாகிருஷ்ணனைக் கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர், நாயை விரட்ட முயன்றார்.

ஆனால், இந்த நிகழ்வு முழுவதும் நாடகத்தின் ஒரு அங்கம் என்று நினைத்த கிராம மக்கள், ராதாகிருஷ்ணனைக் கடிக்கும் நாயை விரட்ட உதவாமல், ஆர்வத்துடன் கைதட்டி ரசித்தனர்.

Scroll to load tweet…

நாடகத்தில் புகுந்த தெருநாய்!

உண்மையிலேயே நாய்க்கடி பட்ட ராதாகிருஷ்ணன், நாயை ஒரு வழியாக தெருநாயை விரட்டிவிட்டு, மேலும் 10 நிமிடங்கள் நாடகத்தைத் தொடர்ந்து நடித்து முடித்தார். பிறகுதான், "சத்தியமாகச் சொல்கிறேன், என்னைத் தெருநாய் நிஜமாகவே கடித்துவிட்டது!" என்று கிராம மக்களிடம் விளக்கினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராதாகிருஷ்ணனுக்கு நாய்க்கடிக்குத் தடுப்பூசி போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ராதாகிருஷ்ணன் நலமுடன் உள்ளார்.

இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. விழிப்புணர்வு நாடகம் நடத்திய கலைஞரே தெருநாயால் கடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.