ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைச் சமாளிக்க, மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து ஒரு புதிய முறையைக் கையாளுகின்றனர். நாய்களுக்கு நீல நிறம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.
சமீபகாலமாக ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. 45 வார்டுகளிலும் தெருக்களில் கூட்டமாகச் சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிப்பதோடு, காலை நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்துகின்றன.
இந்தத் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், மக்கள் தாங்களாகவே ஒரு புதிய முறையை கையாளத் தொடங்கியுள்ளனர்.
நீல நிறத் தண்ணீர் பாட்டில் முறை
ஓசூர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள், வீடுகளுக்கு வெளியே துணிகளுக்குப் பயன்படுத்தும் சொட்டு நீலம் கலந்த நீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து, வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். சில இடங்களில் நீல நிறத்துடன் பச்சை நிறப் பொடிகளும் கலக்கப்படுகின்றன. இந்த நீல நிறப் பாட்டில்களைப் பார்த்தால் நாய்கள் பயந்து அப்பகுதிக்கு வருவதில்லை என மக்கள் நம்புகின்றனர்.
மக்களின் கருத்து
மக்கள் கூறுகையில், “தெருநாய்கள் தெருக்களில் செல்வோரைக் கடிப்பதோடு, வீடுகளுக்கு முன்பு அசுத்தம் செய்து நிம்மதியைக் கெடுக்கின்றன. நாய்களுக்கு நீல நிறம் அலர்ஜி என்பதை அறிந்ததால், இந்த முறையைக் கையாள்கிறோம். இது ஓரளவு நாய்களைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது” என்றனர். மேலும், அதிகரித்து வரும் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை மருத்துவர்களின் விளக்கம்
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், “நீல நிறம் நாய்களுக்கு கண்களை உறுத்துவதுபோல் தெரியும். இதனால், நீல நிறத்தைக் கண்டால் நாய்களுக்கு ஒருவிதமான அலர்ஜி ஏற்படுவது உண்மைதான். இருப்பினும், தண்ணீரில் நீலம் கலந்த பாட்டில்களைப் பார்த்து நாய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அறிவியல் ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றனர். மக்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றபோதிலும், நாய்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்தால், அறிவியல் பூர்வமான தடுப்பு முறைகளை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.
